முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ்(Infosys), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) மற்றும் எச்சிஎல்(HCL) டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்ட்டுகளை வரும் வாரத்தில் அறிவிக்கவுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது தேசிய பங்குச் சந்தையில் சற்று அதிகரித்து 3767.20 ரூபாயாகவும், மும்பை பங்குச் சந்தையிலும் சற்று அதிகரித்து 3766.25 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுற்ற நிதியாண்டுக்கான நிதியறிக்கை மற்றும் 4-ம் காலாண்டு அறிக்கை குறித்த விவாதம் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த விவாதக் கூட்டத்தில், டிவிடெண்டுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும், இதில் கடந்த நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்ட், ஈக்விட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இம்மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் நிறுவனத்தின் நிதியறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும், டிவிடெண்டுகள் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
எச்சிஎல் நிறுவனப் பங்கின் விலையானது தேசிய பங்குச் சந்தையில், சற்று உயர்ந்து 1174.15 ரூபாயாகவும், மும்பை பங்குச் சந்தையில் சற்று உயர்ந்து 1174 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது காலாண்டு அறிக்கை இம்மாதம் 13-ம் தேதியன்று வெளியாகிறது. இதில் 4-ம் காலாண்டு அறிக்கையுடன், கடந்த நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த அறிக்கையும், டிவிடெண்ட் தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தேசிய பங்குச் சந்தையில், 1.26 சதவீதம் அளவுக்கு குறைந்து 1881.40 ரூபாயாகவும், மும்பை பங்குச் சந்தையிலும் சற்றே குறைந்து 1881.55 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.