இந்தியாவின் பெரிய செல்போன் நெட்வொர்க் ஆன ஜியோ, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.தசரா பண்டிகை இந்தியா முழுக்கவும் கொண்டாடப்படும் நிலையில் புனித தினம் என்பதால் பீட்டா டெஸ்டிங்கை ஜியோ செய்துள்ளது.
இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் இலவசமாக 5ஜி சேவையை பெற முடியும். இதற்கு free welcome offer என ஜியோ பெயர் சூட்டியுள்ளது.
இந்த சலுகையை மேலே சொன்ன 4 நகரங்களில் மட்டும் முதல்கட்டமாக ஜியோ அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 1ஜிபி அளவுக்கு ஒரு நொடியில் தரவுகளை பெற முடியும். வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் குறித்த விமர்சனங்கள் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ சிம்கார்டு மாற்றாமல் அதே சிம்காரிடிலேயே 5ஜி வசதி பெறலாம் என ஜியோ கூறியுள்ளது. ஏற்கனவே செலுத்திய 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சோதனையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூடுதலாக பணம் செலுத்த தேவையில்லை என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கொரியா,பிரிட்டன்,ஜப்பான்,சீனாவைத் தொடர்ந்து 5ஜி சேவை உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் 200 நகரங்களுக்கு 5ஜி சேவை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்தகட்டமாக 2-வது சுற்றில் 600 நகரங்களை 5ஜி வசதியுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.