முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் மீதான வரியை ₹3 வரை குறைத்தார், இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ₹1,160 கோடி.
நிதி ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், நிதி அமைச்சர் பழனிவேல், பெட்ரோல் மீதான உள்ளூர் வரியை மூன்று ரூபாய் குறைத்து, ஒன்றிய அரசுக்கு சவால் விடுத்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யவில்லை. பாஜக, தமிழ்நாடு வளமான மாநிலம் என்று கூறி வந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் நடுத்தர வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார். ஒன்றிய அரசு நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பதை இந்த விலைக்குறைப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
பட்ஜெட்டில் பாராட்டப்பட வேண்டிய பல விஷயங்கள் இருந்தாலும், நிதி அமைச்சரிடமிருந்து divestment ஐ எதிர்பார்த்தேன் என்கிறார் ஸ்ரீனிவாசன். டைட்டனில் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் (TIDCO) பங்குகளையும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) மாநில அரசின் 5% பங்குகளையும் அரசாங்கம் விலக்கிக் கொண்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.
“நிதி அமைச்சர் நிதிநிலையை சரிசெய்வதை ஒத்திவைத்துள்ளார். தமிழ்நாட்டின் நிதி மேலாண்மையில் என்ன தவறு என்பதை அவர் வெள்ளை அறிக்கையில் மிகத் திறமையாக சுட்டிக்காட்டி இருக்கிறார், ஆகவே, அரசு அதை சரிசெய்யத் துவங்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் இன்னும் அதிக காலம் தேவைப்படும் என்று கூறி ஒரு வருடத்திற்கு இதை ஒத்தி வைத்துள்ளார்” என்று மேலும் ஸ்ரீனிவாசன் கூறினார்.
SICCI சேம்பர் தலைவர் AR RM அருண், பெட்ரோல் மீதான செஸ் குறைப்பு நடவடிக்கையை வரவேற்பதாகக் கூறினார். இந்த விலை குறைப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
“ஒரு குடும்பத்திற்கு ₹2,63,976 என்ற கடன் சுமையை சுட்டிக்காட்டிய வெள்ளை அறிக்கையை முன்வைத்துப் பார்த்தால், இந்த அறிவிப்பு ஒரு ஜனரஞ்சகமான அறிவிப்பாகக் கருதப்படலாம். இருப்பினும் பெட்ரோல் விலை குறைப்பு சாமான்ய மனிதர்களுக்கு நிவாரணமாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
இலவசங்களை (freebies) வழங்குவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அவை செலவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சோம்பலைத் தூண்டுவதாக அமையும் என்றும், இந்த பட்ஜெட் தொழில் முனைவோர் மற்றும் சாமான்ய மனிதர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இருக்கிறது என்று அருண் மேலும் கூறினார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் பட்ஜெட்டை முற்போக்கானது என்று பாராட்டினார். “அரசாங்கம் வளர்ச்சியில் தெளிவாகக் கவனம் செலுத்தியுள்ளது, மேலும் அதை அடைவதில் இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது பொருளாதாரத்திற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் அதை செலுத்தும். இந்த பட்ஜெட்டின் மூலம், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரை உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
“பெட்ரோல் மீதான வரியைக் குறைப்பது மக்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் வாகனத் துறைக்கு மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும்” என்று டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ் கூறினார். “கோயம்புத்தூரில் 500 ஏக்கரில் சுமார் ₹3,000 கோடி முதலீட்டில் பாதுகாப்பு தொழிற்பூங்கா அமைக்கப்படுவது சரியான திசையில் செல்லும் நடவடிக்கை” என்று அவர் மேலும் கூறினார்.
“Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் வரப்போகும் நான்கு TIDEL பூங்காக்கள் இந்த நகரங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்க உதவும்” என்று அவர் மேலும் கூறினார். சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு “ஃபின்டெக்” சிட்டி அமைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்தது முக்கியமானதென்று பலர் கருதுகின்றனர்.
“கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்”டின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் வித்யா மஹாம்பரே, “பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவது வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும்” என்று கூறினார். சிறந்த நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகத்தில் பட்ஜெட் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (National Family Health Survey), 2015-16 ஆம் ஆண்டில் மாநிலங்களில் வாழும் மக்களில் சுமார் 31% பேர் மட்டுமே தங்கள் வீடுகளில் குழாய் நீரைப் பெற்றனர். “1.27 கோடி வீட்டு குழாய் இணைப்புகளுக்கு பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷனை பட்ஜெட்டில் அறிவித்தது. 200 ஏரிகள் மற்றும் குளங்களை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவது, மேலும் வரும் ஆண்டுகளில் அணைகள் மற்றும் ஷட்டர்கள் கட்டுவது அவசியம்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு கடலோர மாநிலமாக இருப்பதால் பருவநிலை மாற்றத்தை (climate change) எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து நிதியமைச்சர் பட்ஜெட்டில் பேசினார். காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகள் ₹500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு ‘பசுமை இயக்கம்’ உருவாக்கப்படும் என்று அவர் பட்ஜெட்டில்அறிவித்தார்.
Credits – ET