இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும்.
ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை. அதைவிட முக்கியமான விவசாயம் ஒன்று இருக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் பணவீக்க விகிதத்தை 5.59 % என்று அறிவித்து விட்டதால், கடந்த ஆண்டு நீங்கள் செலவு செய்த விஷயங்கள் எல்லாம் இந்த ஆண்டு 5.59 % அதிகரித்து விட்டது என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை.
நிச்சயமாக என்னுடைய கணக்கில் அப்படி இல்லை. உங்களுடையதும் வேறொரு கணக்கைக் கொண்டதாகவே இருக்கும், நானும் எனது நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்த போது சில விவரங்களை அவர் எனக்குக் கொடுத்தார்.
இந்தியாவின் உண்மையான பணவீக்கம்
சில செலவினங்கள் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது, சில அதே அளவு குறைந்திருக்கிறது. பெருந்தொற்றின் பொருளாதாரச் சூழல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், உறுதியாக என்னால் சொல்ல முடியும், எல்லாப் பொருட்களின் விலையும் ஒரே அளவில் உயர்வதற்கான வாய்ப்பில்லை. ஒவ்வொரு செலவினமும் அல்லது பொருளும் அதற்கான தனித்த உயர்வு அல்லது குறைவு விகிதங்களைக் கொண்டிருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது, எனது நண்பனின் பணவீக்க சதவிகிதம்:-
9.57 %
இது ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கும் விகிதத்தோடு எந்த வகையிலும் தொடர்பில்லாதது. ரிசர்வ் வாங்கி நமக்குச் சொன்னது வெறும் 5.59 %, ஊடகங்கள் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று உங்கள் காது கிழியக் கத்திக்கொண்டிருக்கும் போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குத் புரியும் என்று நம்புகிறேன். ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒரு தொகுப்பை எடுத்துக்கொண்டு, சராசரியாக இருக்கக்கூடிய தேசிய பணவீக்க விகிதத்தை வெளியிடுகிறது, ஆனால், நீங்களும், நானும் நடைமுறையில் வேறொரு பணவீக்க விகிதத்தை எதிர் கொள்வோம். அது தேசிய பணவீக்க விகிதத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் செலவுகளை கவனமாகக் குறித்துக் கொண்டு கணக்கிட்டால் நம்முடைய பணவீக்க விகிதத்தை நம்மால் கண்டறிய முடியும். நான் என்னுடைய செலவுகளை இப்போது கணக்கிடுவதில்லை, முன்பு செலவுகளை நான் கணக்கிட்டிருக்கிறேன், இருப்பினும் நான் பெரிய அளவில் செலவு செய்வதில்லை. நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களுக்கே உரிய தனித்த பணவீக்க விகிதத்தை எதிர் கொள்கிறார்கள் என்பதுதான், நிறுவனங்களும், அரசும் சொல்லும் கணக்கை விட இது அதிகமாகவே இருக்கும்.
இப்போது 9.57 % பணவீக்க விகிதத்தோடு வங்கியின் வைப்பு நிதியின் வரிக்கு முந்தைய வட்டியான 5 % த்தை ஒப்பிட்டால், ஒவ்வொரு நாளும் நாம் பணத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இங்கு நுட்பமாக கவனிக்கப்பட வேண்டியது “வரிக்கு முந்தைய” என்ற சொல்லை, பணவீக்கமும், வரி விகிதமும் சேரும்போது உங்கள் செலவு செய்யும் சக்தி ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வரும்.
எடுத்துக்காட்டாக, சென்ற வருடம் நீங்கள் 1 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக வங்கியில் 6 % வருட வட்டிக்கு வைத்தீர்கள் எண்டு வைத்துக் கொள்வோம், ₹6,000 உங்களுக்கு வட்டி கிடைக்கும், ஆனால், 20 % வரித் தொகுப்பிற்குள் நீங்கள் வருவீர்கள் (₹6,000 யில் ₹1,200 வரி கொடுத்து விடுவீர்கள்)
இப்போது வரிக்குப் பிந்தைய உங்கள் வட்டி வெறும் ₹4,800 மட்டும்தான், முதிர்வுக் காலத்தில் உங்களுக்கு ₹1,04,800 கிடைக்கும். அதேநேரத்தில் பணவீக்கமும் உயர்ந்து பொருட்களின் விலையையும், சேவைகளின் விலையையும் உயர்த்துகிறது.உங்கள் பணவீக்க விகிதமான 9.57 % த்தைக் கணக்கிட்டால் ஒரு லட்சத்தில் கிடைக்க வேண்டிய பொருட்களுக்கு இப்போது ₹1,09,570 கொடுக்க வேண்டியிருக்கும். (இங்கே எனது நண்பரின் பணவீக்க விகிதத்தை நான் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்).
இப்போது ஒப்பிட்டுப் பார்ப்போம், உங்கள் வருமானம் ₹1,04,800 < உங்கள் செலவினம் ₹1,09,057. இந்தக் கணக்குப்படி பார்த்தால் சென்ற வருடத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருடம் அதே விலைக்கு வாங்க முடியாது, ஏனெனில் உங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியை வரியும், பணவீக்கமும் விழுங்கி விட்டன, இதுதான் இன்று நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நிகழ்கிறது, விலைவாசி அதிகரித்துக் கொண்டே இருப்பது தொடரும்.
உங்கள் செலவுகளை நீங்கள் குறைக்க முயற்சி செய்யலாம், (ஆனால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செலவுகளைக் குறைக்க முடியாது) மாறாக, நீங்கள் பணவீக்கத்தை வெல்லக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். ஆகவே, குற்றம் சொல்வதை விட்டு விடுங்கள், உங்களால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள், பணவீக்கம் என்பது பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒரு கெட்ட வார்த்தை, அது அப்படியே தான் தொடரும், நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் தனிப்பட்ட பணவீக்க சதவிகிதத்தைக் கண்டறியுங்கள், அதை வெல்லக்கூடிய முதலீடுகளை நோக்கி நகருங்கள்.