“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு குறைந்திருந்தது. சந்தைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் முக்கிய பதவி வகிக்கும் அங்கத்தினர், நிறுவனர் அல்லது பொறுப்பாளர்கள் அந்நிறுவனப் தங்களது நிறுவனப் பங்குகளையே வாங்குவதும் விற்பதுமான தகவல்களை பங்குச் சந்தைக்கு வெளிப்படுத்த வழங்க வேண்டும். முன்னணி நாளிதழ் ஒன்று இதன் மாதாந்திர போக்கினை பற்றி மூல தரவு வெளிப்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள், தங்கள் பங்குகளை விற்றுப் பணமாக்கி வருகிறார்கள். அதே நேரத்தில், சில சிறு மற்றும் நடுத்தர மூலதன நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் தங்கள் பங்குகளை சுருக்கிக்கொள்ளும் நோக்கில் வர்த்தகம் மேற்கொள்கின்றனர். இம்மாதிரியான பரிவர்த்தனைகள் காளை சந்தையில் பணமாக்கிக்கொள்ள மட்டும் விற்பனை செய்யப்படுவதில்லை. இவர்களில் சிலர் ஏற்கனவே வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிட்டுத் தங்கள் நிறுவனங்கள் அதன் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பங்குகளில் (ESOPs) முதலீடு செய்வதற்காகவும், மற்றும் சிலர் வேறு தேவைகளுக்காக சீரான இடைவெளியில் பங்குகளை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
சந்தைகள் வரலாற்று உச்சத்தில் இருக்கும்போது, பங்குகளும், குறியீடுகளும் மிகை மதிப்பில் உள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்சைட் ட்ரேடர்கள் விற்பனையை மேற்கொள்வதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக பொருளாதார வல்லுநர்களின் பார்வையிலிருந்து, நிப்டி குறியீட்டு திறன் மதிப்பு 18.8 சதவிகிதம் இந்தாண்டில் உயர்ந்துள்ள வேலையில் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் முறையே 32.4 சதவிகிதமும், 42.4 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
இன்சைட் டிரேடர்களை இத்தகைய சூழல் லாபம் ஏற்படுத்திக்கொள்ள தூண்டுகிறது, இதேசமயத்தில் பெருவாரியான சிறு குறு முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது ஒரு சிகப்பு சமிக்ஞையே. இது போன்ற பல சிவப்பு சமிக்ஞைகள் சந்தைகளில் ஏற்படும் போதிலும் பெரும்பாலானோர் இதனை பொருட்படுத்துவதில்லை ஏனெனில் சந்தைகளில் மேற்கொண்டு உள்நுழையும் பணப்புழக்கம் இந்த சிகப்பு சமிக்ஞைகளை நீர்த்துப்போக செய்கிறது. சந்தை வீழ்ச்சிகாணும்போதே சிறு முதலீட்டாளர்கள் இதனை உணரத் தொடங்குகின்றனர் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.