ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார்.
“இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தியும், பார்த்தசாரதியின் தனிப்பட்ட உத்திரவாதத்தைப் பயன்படுத்தியும் ₹137 கோடி கடனாகப் பெற்றிருப்பது மட்டுமன்றி அவருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் முறைகேடாகப் பயன்படுத்தியதும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy : NDTV
கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளோடு இணைக்கப்பட்ட, வணிகப் பரிவர்த்தனைக் கணக்குகளில் இருந்து ₹720 கோடி பணத்தை முறைகேடு செய்திருப்பதும், இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி வேறு பல வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றிருப்பதும், இதில் ₹680 கோடிப் பணம் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராமல் இருப்பதும், வாங்கிய கடன்கள் திரும்ப செலுத்தப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று காவல்துறை செய்திக்குறிப்பு குறிப்பிடுகிறது.
HDFC வங்கி அளித்திருக்கும் புகாரின் பேரில் மேலும் இரண்டு கடன் முறைகேடுகள் குறித்த வழக்குகள் கார்வி நிறுவனத்தின் மீதும், அதன் துணை நிறுவனமான “கார்வி கம்மாடிட்டீஸ்” நிறுவனத்தின் மீதும் முறையே ₹340 கோடி மற்றும் ₹7 கோடி மோசடி தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 2019 இல் செபி, “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனம் தனது தரகு வணிகத்தில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்குத் தடை விதித்திருந்தது, வாடிக்கையாளர்களின் பிணைகளைப் பயன்படுத்தி ₹2,000 கோடி அளவில் முறைகேடு செய்ததன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டது.

நவம்பர், 2020 இல், மும்பை பங்குச் சந்தை (BSE), கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் நிறுவனத்தைத் தகுதி நீக்கம் செய்து, தனது உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கியிருந்தது, இதனைத் தொடர்ந்து தேசிய பங்குச் சந்தையும் (NSE) அதே நடவடிக்கையை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.