ஜூன் 2020 துவக்கத்தில் இருந்து பங்குச் சந்தை ஏற்றத்துடன் காளை ஓட்டத்தில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் எப்போதுமில்லாத அளவு சில்லறை முதலீட்டாளர்களை சந்தை ஈர்த்திருக்கிறது, அவர்கள் தங்கள் நேரம் மற்றும் பணத்தை மட்டும் செலவிடவில்லை, மாறாக பங்குச் சந்தை வணிகத்தில் பங்குபெறும் ஒரு நல்ல வாய்ப்பையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஒரு நாளில் 60,000 கோடி புழங்கும் பங்குச் சந்தையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பல சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு குழுவாக இருந்து ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் பங்களிப்பு விகிதம் 12 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. 16 ஆம் நிதியாண்டில் 33 சதவிகிதமாக இருந்து 21 ஆம் நிதியாண்டில் 45 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு விகிதம் ஒற்றை இலக்கத்திற்குக் கீழே இருக்கிறது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு ஒற்றை இலக்கமாக மாறி இருக்கிறது. 2020-21 ஆம் நிதியாண்டில் மட்டும் மாதமொன்றுக்கு ஏறத்தாழ 12 லட்சம் டீமேட் கணக்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன, 2019-20 ஆம் நிதியாண்டில் இது மாதத்திற்கு 4.2 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் இரட்டிப்பாகியுள்ளது, முதல் காலாண்டில் மாதாந்திர சராசரி கணக்கு திறப்பு 24 லட்சம் கணக்குகள் வரை உயர்ந்தது. இந்த கணக்குகள் அனைத்தும் சில்லறை முதலீட்டாளர்களின் கணக்குகள்.
ஆனால், இதுபோன்றதொரு காளை சந்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதுதான் தவறுகள் மெல்ல ஊடுருவத் துவங்குகிறது, லட்சக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள், இது நாம் பங்குச் சந்தை வரலாற்றில் ஏற்கனவே பலமுறை சந்தித்ததுதான். இப்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும், ஏனெனில் முன்னெப்போதுமில்லாத இரண்டு புதிய விஷயங்கள், முதலாவது, பல்வேறு வழிமுறைகள் மூலமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை தானியங்கு இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம், இரண்டாவது சமூக ஊடகங்களின் வளர்ச்சி, முன்பு எப்போதுமில்லாத ஒரு மந்தை நகர்வை இது உருவாக்கக்கூடும், இந்த இரண்டு காரணிகளும் எளிதான பயன்பாட்டையும், எல்லா விஷயங்களையும் எளிதாகப் பகிர்ந்து கொள்வதையும் உள்ளடக்கி இருக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு எதிராகத் திரும்பும், எடுத்துக்காட்டாக உத்சவ் கபூரின் இந்த கதையை கவனியுங்கள்.
ஐ.ஐ.டியில் பயின்ற மென்பொருள் பொறியாளரான உத்சவ் பெருந்தொற்றுக் காரணமாக ஏப்ரல் 2020 இல் தன்னுடைய வேலையை இழந்தார். அவருடைய கையில் 25 லட்சம் சேமிப்பு இருந்தது, இந்தப் பணம் முழுதும் நிலையான வைப்புத் தொகையாக இருந்தது. பெங்களூரின் “மார்க்கெட்கால்ஸ்” நிறுவனத்திலிருந்து பங்குச் சந்தை நுட்பங்களை சொல்லிக்கொடுக்கிறோம் என்று அவரிடம் இருந்து 1.2 லட்சத்தைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு உயர் தொழில்நுட்ப வசதிகளோடு தன்னிச்சையாக இயங்கும் பங்குச் சந்தை முதலீட்டுச் செயலியை (ஆல்கோஸ் வகை) அவர்கள் உருவாக்கினார்கள். இது புள்ளிக்கணக்கியல் அடிப்படையில் எந்த மேற்பார்வையும் இல்லாமல் தானாகவே சிறந்த தேர்வுகளில் முதலீடு செய்து மிகச்சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் என்று “மார்க்கெட்கால்ஸ்” உறுதியளித்தது, உத்சவ் அடுத்த 3 மாதங்களில் தனது சேமிப்பில் 8 லட்சத்தை இழந்தார்.
சில காலம் சோர்வடைந்திருந்த உத்சவ், “ட்ரேட்ட்ரான்” என்றொரு புதிய சீரழிவு செயலியை இணையத்தின் வாயிலாகக் கண்டடைந்தார், பங்குச் சந்தைகளில் இருந்து மாதம் 20 % க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டலாம் என்று அந்தச் செயலி ஆசை காட்டியது. இது எந்த ஒரு வழிகாட்டுதலும் தேவைப்படாத புள்ளிக்கணக்கியல் அடிப்படையிலான “ஆல்கோஸ்” சர்வர் வகை செயலி, சொல்லப்போனால் ட்ரேட்ரான் ஒரு தனியாக இயங்கும் சந்தை எனலாம், ஏனெனில் இந்தத் தளத்தில் பல பங்குச்சந்தை வணிக குருக்கள் தங்கள் விருப்பப்படி பல உத்திகளை விற்கிறார்கள், ஒவ்வொருவரும் கண்ணைக் கவரும் வருமானத்தைக் காட்சிப்படுத்தி அறிவியல் பூர்வமானதென்று உறுதியளிக்கிறார்கள் என்கிறார் உத்சவ்.
“டிரேட்ட்ரான் செயலி ஒரு ஆன்லைன் விளையாட்டு போர்ட்டலைப் போல அழகானது மட்டுமல்ல, பயன்படுத்தத் தூண்டும் போதை தரக்கூடியது” என்கிறார் உத்சவ், பங்குச்சந்தையின் நன்கு அறியப்பட்ட தரகர்களை இந்த செயலி ஒருங்கிணைக்கிறது, செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை “டிரேட்ட்ரான்” எனும் ஆல்கோஸ் வகையான இந்தச் செயலி மூலமாக உத்சவ் பங்குச் சந்தையில் ₹20 லட்சத்திற்கும் மேல் இழந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, வைப்பு நிதிகளில் இருந்த அவரது முழு சேமிப்பும், அவரது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கூடுதல் சேமிப்பும் இதன் மூலமாக அழிக்கப்பட்டது.
உத்சவ், ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஆறு பங்குச் சந்தைத் தரகர்களுடன் இணைந்து கணக்குகளைத் தொடங்கி வர்த்தகம் செய்தார், அவர்கள் அனைவரும் “ஆல்கோ” வகை வர்த்தகத்தை பரிந்துரைத்தனர். அவ்வாறு தொடர்ந்து வர்த்தகம் செய்தது தன்னுடைய முட்டாள்தனம் என்று இப்போது ஒப்புக்கொள்கிறார், பங்குச் சந்தைகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு புத்திசாலியாக இல்லாததற்காக அனைத்து இழப்புகளையும் தன்னுடைய சொந்தத் தவறு என்று அவர் ஏற்றுக்கொண்டார். “இந்த முதிர்ச்சி “ஆல்கோஸ்” வகை செயலிகள் அல்லது தளங்களில் இருந்து கற்ற பாடத்தால் வந்தது”, என்கிறார் உத்சவ். இருப்பினும், அதன்பிறகு அவர் அலோகிரித்ம்ஸ் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார், மேலும் இந்த ஆல்கோஸ் தளங்கள் தேசிய பங்குச் சந்தை மற்றும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதைக் கண்டறிந்தார். இதற்கிடையில் அவருடைய தரகர்களில் ஒருவர் IIFL செக்யூரிட்டீஸ் உருவாக்கி இருக்கும் “அல்கோபாபா” என்ற மற்றொரு புதிய புரட்சிகரமான செயலியில் முதலீடு செய்வதற்கு அவரை அழைத்தது வேறு கதை.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களோடு கொந்தளிப்பாக இருக்கும் போது பல உத்சவ்கள் தோன்றி ஆல்கோஸ் போன்ற தளங்களில் தங்கள் சேமிப்பை இழப்பார்கள், ஆல்கோஸ் போன்ற தானியங்கி செயலிகள் முன்பிருந்த சந்தைகளின் போக்கைப் பற்றிய பகுத்தறியும் தன்மையை அழிக்கிறது, பங்குச் சந்தையில் மந்தை செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
அக்டோபர் 19, 1987 ல் இருந்து, திட்டமிடப்பட்ட பங்குச் சந்தை வர்த்தகம் அமெரிக்காவில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டில் ஒரே நாளில் 22.6 சதவீத சரிவுக்கு வழிவகுத்த நிகழ்வு, இதுபோன்ற பகுத்தறியும் தன்மையற்ற மந்தைப் போக்குக்கு மிகச்சிறந்த உதாரணம். இது உலகளாவிய அளவில் பீதியை உருவாக்கியது, உலகின் முக்கிய சந்தைகள் இதன் விளைவாக 20-45 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. இதற்கு காரணம் ஒரு பங்குச் சந்தை வர்த்தகத் திட்டம், பெயரளவில் இது முரண்பாடாக “போர்ட்ஃபோலியோ காப்பீட்டுத் திட்டம்” என்று அழைக்கப்பட்டது, இந்த பகுத்தறியும் தன்மையற்ற தானியங்கு செயல்திட்டம், பங்குகள் புதிய வீழ்ச்சியை அடைந்ததால் முதலீட்டாளர்களை விற்பனை செய்ய அழைப்பு விடுத்தது. ஆனால், இதுபோன்ற திட்டங்கள் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதுதான் நாம் இதுவரை கண்கூடாகப் பார்த்த விஷயம், தொடர்ச்சியான சந்தை வீழ்ச்சி, அதிக விற்பனையை ஊக்குவிக்கும், தொடர்ந்து சந்தை மதிப்புக்கு குறையக் குறைய மேலதிக விற்பனை அதிகரித்து ஒரு தீய சுழற்சியாக இது மாறுகிறது.
பங்குச் சந்தையில் வணிகம் செய்யும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் அனைத்தும் இப்போது ஓரிடத்தில் கிடைக்கிறது, முதலாவது பரிவர்த்தனையை அதிகரிக்க தரகர்களால் அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான ஊக்கத்தொகை, இரண்டாவது செயல்படுத்துவதற்கு எளிமையான செயலிகள், கோடிங் போன்ற சிக்கலான விஷயங்கள் எதுவும் இல்லாத பயன்பாட்டு முறைகள், மூன்றாவதாக கவர்ச்சிகரமான ஆன்லைன் விளையாட்டு செயலிகளைப் போன்ற ஆல்கோ செயலிகள் வடிவமைப்பு, நான்காவது இந்த செயலிகளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எந்தப் பகுப்பாய்வுகளும் தேவையில்லை, முன்முடிவு செய்யப்பட்ட “ஆஃப் ஷெல்ப்” அறிவுரைகளை முன்வைத்து செய்யப்படும் முதலீடுகள், ஐந்தாவது, பலமுனை வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பு, வெளியே இருந்து கிடைக்கும் ஏதாவது ஒரு காரணம் சந்தையை நீர்த்துப் போகச் செய்யும், இது வேதிப்பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கிடங்கிற்குத் தீ வைப்பதைப் போல, ஆனால், துரதிர்ஷ்டவசமாக சந்தையை நிர்வகிக்கும் ஒழுங்கு முறை ஆணையமான செபி (SEBI) இந்த ஆபத்தான போக்கைக் கவனிக்க மறுக்கிறது, சில்லறை முதலீட்டாளர்களை ஆக்கிரமிக்கும் ஆல்கோஸ் வகை செயலிகளை முறைப்படுத்த ஆர்வமில்லாமல் இருக்கிறது, இது ஒட்டு மொத்த சந்தையையும் ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.