இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தையில் கோக்க- கோலா நிறுவனத்தின் கின்லே, பெப்சி நிறுவனத்தின் ஆக்வஃபீனா ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், பிஸ்லரி நிறுவனம் உள்ளது. மொத்த சந்தையில் பிஸ்லரி நிறுவனத்தின் பங்கு மட்டும் 32 விழுக்காடாக உள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வரும் பிஸ்லரி நிறுவனத்திடம் தற்போது 150 உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் விநியோகஸ்தர்கள், 5 ஆயிரம் லாரிகள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் பெரு நிறுவனமும், ஜாம்பவானுமான டாடா குழுமத்தின்,டாடா கன்சியூமர் பிசினஸ் பிரிவு, பிஸ்லரி நிறுவனத்தை வாங்க முயற்சித்து வருகிறது. பிஸ்லரி நிறுவனத்தை டாடா வாங்கினால், டாடா குழுமத்தின் வணிகத்தை மேலும் வலுசேர்க்கும் என்பதால் இதில் டாடா அதிக கவனம் செலுத்தி வருவதாக பிஸ்லரி நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிஸ்லரி நிறுவனத்தை விற்பதாக இருந்தால் அதை ஒரு இந்திய நிறுவனத்துக்கே விற்க விரும்புவதாக ஏற்கனவே பிஸ்லரி நிறுவனத்தின் முதலாளி ரமேஷ் சவ்ஹான் கூறியிருந்தார். முன்னதாக நெஸ்ட்லே, டானோன் உள்ளிட்ட நிறுவனங்களும் பிஸ்லரியை வாங்க முயற்சி செய்து தோல்வியுற்றது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனைப் பிரிவும் பிஸ்லரி நிறுவனத்தை கைப்பற்ற முனைப்பு காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.