நடப்பாண்டின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சுமார் அரை சதவீதம் சரிந்திருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 840 புள்ளிகாக வணிகம் நிறைவுற்றது.இதேபோல் தேசியபங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து 18ஆயிரத்து105 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது. கடைசி வர்த்தக நாளில் போட்ட முதலை எடுப்பதிலேயே முதலீட்டாளர்கள் குறியாக இருந்தனர். உலோகம், ரியல் எஸ்டேட்,பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். இந்தவாரத்தில் அதீத ஏற்றமும் இல்லாமல், பெரிய பாதிப்பும் சந்திக்காமல் ஊசலாட்டத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் இருந்தன. ஒட்டுமொத்தமாகவே பார்க்கும்போது நடப்பாண்டு மிகப்பெரிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் பலநேரங்களில் வீழ்ச்சியையும் கண்டு முதலீட்டாளர்களை கலங்க வைத்திருந்தது. உலகளவில் நிலவிய பங்குச்சந்தை சரிவுகளின் தாக்கமாகவே இந்திய சந்தைகளும் லேசாக விழுந்திருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆசிய பங்குச்சந்தைகள் லாபத்தை பதிவு செய்தாலும்,ஐரோப்பிய சந்தைகள் மோசமாக வீழ்ந்துள்ளதால் பங்குச்சந்தைகள் மிகமோசமான நிலையை எட்டின. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து அடுத்தடுத்து நிலவிய காரணிகள் அதாவது உக்ரைன்-ரஷ்யா போர் மிகமுக்கிய தாக்கத்தை உலகளவில் பங்குச்சந்தையை பதம் பார்த்தது என்றால் அது மிகையில்லை.