மொரீசியஸ் என்ற தீவு நாடு அளவில் சிறியது என்றாலும் சர்ச்சைகளுக்கு பெயர்பெற்றது. சுற்றுலா மிகவும் பிரதானமாக உள்ள இந்த தீவுகளில் பல கோடீஸ்வரர்கள் தங்கள் பணத்தை சொத்துகளாக மாற்றி குவித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த குறிப்பிட்ட தீவு வரி ஏய்ப்பு செய்வதற்கும், கருப்புப்பணத்தை பதுக்குவதற்காகவும் பயன்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட தீவில் வெளிநாட்டு பணம் கொட்டுவதும், பின்னர் அதனை வேறு நாட்டுக்கு மாற்றுவதும் பல ஆண்டுகளாக மறைமுகமாக நடக்கும் மிகப்பெரிய கருப்பு வணிகமாக இருக்கிறது. இந்த சூழலில் அண்மையில் அந்த நாட்டு விதிகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 24ம் தேதி ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி 38 நிறுவனங்களை பெயரளவில் மொரீசியஸில் நடத்துவதாகவும், கணக்கில் வராத பணத்தை அங்கே பதுக்கி விட்டு தனது சகோதரரின் நிறுவனத்துக்கு மாற்றுவதாகவும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் கவுதம் அதானி இதனை முழுமையாக மறுத்து 413 பக்க விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே லேயரிங் என்ற வகையில் கருப்புப்பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு புகார்களுக்கு ஆளான அதானி குழுமம் தனது நிறுவனங்களைத் தான் மொரீசியசில் தனது சகோதரர் பேரில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்தியா மற்றும் மொரீசியஸ் நாடுகள் வரி திட்டங்களை கடுமையாக்கியுள்ளதால் மொரீசியஸில் இருந்து பணத்தை இந்தியாவுக்கு ஆன்லைன் வாயிலாக பெரியளவில் மாற்றுவது சிக்கலாக மாறியுள்ளது. பொதுவாக அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பெறப்படும் பணம் மொரீசியஸ் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் , அதானி குழுமம் வேறொருவர் பெயரில் நிறுவனத்தை நடத்தியிருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.