இந்தியா முழுவதும் ஃபாஸ்ட்டேக் மூலம் டோல் கட்டணம் செலுத்தி செல்லும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இருப்பினும், சில இடங்களில் நகருக்கு உள்ளேயும், நகரத்தில் எல்லைகளிலும் சுங்கச்சாவடிகள் இன்னும் செயல்பாட்டில் இருக்கின்றன. தினமும் அலுவலகம் வந்து செல்பவர்கள் இதன் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், நகர எல்லையில் உள்ள டோல்கேட் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் காத்திருப்பு நேரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய நிதின் கட்கரி, வாகனத்தில் இடம்பெற்றுள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில், உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக கட்டணம் எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நடைமுறை கூடிய விரைவில், நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். இந்த நடைமுறைகளுக்கு அமலுக்கு வரும் பட்சத்தில், சுங்கச்சாவடி என்ற கட்டமைப்பே இந்தியாவில் தேவைப்படாது என கூறியுள்ளார்.