கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணியாற்றும் சேவையை அறிமுகப்படுத்தின. இது பணியாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியதோடு ஐடி துறை, பெருந்தொற்று காலகட்டத்தில் கூட நல்ல லாபம் ஈட்டியது. நிலைமை இப்படி இருக்க, கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் ஆபிசுக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர். வாரத்தில் 3 முறையாவது அலுவலகத்துக்கு வந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் அந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
படிப்படியாக ஹைப்ரிட் வகையில் பணியாற்ற ஐடி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி வரும் 10ம் தேதி முதல் விப்ரோ பணியாளர்கள் தங்கள் இந்திய அலுவலகங்களுக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதிலும் புதன்கிழமைகள் மற்றும் சனி,ஞாயிறில் அலுவலகம் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்தைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவனமும் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகம் அழைத்திருப்பது பிற போட்டி நிறுவனங்களையும் இதையே செய்ய நிர்பந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்றி பழகிப்போன ஐடி ஊழியர்கள்,.. மீண்டும் பழையபடி அலுவலகம் சென்று பணியாற்ற விருப்பம் இல்லாமல் உள்ளதாகவும், ஆனால் வேறு வழியே இல்லை என்பதால் வேண்டா வெறுப்பாக பணிக்கு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதிலும் மற்றொரு தரப்பினர் அலுவலகத்திற்கு திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.