மிகக் குறைந்த தொலைத்தொடர்பு கட்டண நாட்கள் முடிந்து விட்டன. அடுத்ததாக விலை உயரப் போவது பிராட்பேண்ட் தான். சமீபகாலமாக பிராட்பேண்ட் கட்டண விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் போரில் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு தற்போதைய சேவைகளை சாத்தியமானதாக மாற்றுவதற்கு 15 லிருந்து 20 சதவீத கட்டண உயர்வு அவசியம் என்று மேக்பேலா பிராட்பேண்ட் இணை நிறுவனரான தபபிரதா முகர்ஜி தெரிவித்தார்.
இப்போது சந்தைப்போக்கை தக்க வைத்துக் கொள்ள, ஓவர் தி டாப் (OTT) ஸ்ட்ரீமிங் சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது இணையச் சேவை வழங்குநர்களுக்கு மிகப் பெரிய சுமையாகும் என்று தெரிவித்த அவர், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் பிராட்பேண்ட் கட்டணங்களை திருத்தி அமைப்பதில் முன்னணி வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு இதுவரை எந்த நிறுவனமும் பதிலளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள 20 சதவீத கட்டணங்களை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சேவைத் துறையும் தொடர்ந்து விலை உயர்த்தும் படலத்தை துவக்கி இருக்க பாதிக்கப்படப்போவதென்னவோ நடுத்தர ஏழை மக்கள் தான் என்பதுதான் கவலைதரும் விஷயம்.