நாட்டின் வரி செலுத்துவோர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள் (cash transactions) குறித்து வருமான வரித் துறை (Income Tax department) உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. இது வெளிநாட்டுப் பயணத்திலும் பொருந்தும். அமெரிக்க டாலர் அல்லது வேறு எந்த வெளிநாட்டு நாணயத்தையும் வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி பணம் மாற்றினால், வருமான வரித் துறைக்கு தகவல் அனுப்பப்படும். வருமான வரி அறிவிப்பை பெறவும் வாய்ப்புகள் உண்டு.
பணம் மாற்றுவதற்கான வரம்பு என்ன?
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, ரொக்கப் பணப் பரிவர்த்தனை மூலம் அமெரிக்க டாலர் அல்லது வேறு எந்த வெளிநாட்டு பணத்தையும் நீங்கள் வாங்கலாம். ஆனால், ₹ 10 லட்சம் என்ற எல்லையைத் தாண்டி நீங்கள் செல்லும் போது, பணம் மாற்றிக் கொடுக்கும் நிறுவனம் மூலமாக இந்திய வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் மாற்றும் பணத்திற்கும், நீங்கள் அந்த ஆண்டில் கணக்கில் காட்டிய பணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு இருந்தால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புண்டு.
வருமான வரித் துறை அறிவிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
வருமான வரித் துறை அனுப்பும் அறிவிப்பை வரி செலுத்துவோர் ஒரு விசாரணையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு, வருமான வரித்துறை இணைய தளத்திற்குச் சென்று படிவம் 26 AS இல் உள்நுழைந்து, வருமான வரி அறிவிப்புக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.