இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி, வேதாந்தா மற்றும் ஆதித்ய பிர்லா ஆகியவை முதன்மை வகிக்கின்றன.
அதானி குழும நிறுவனங்கள் 108 சதவீதம் ஆதாயம் ஈட்டிய நிலையில், வேதாந்தா 59 சதவீதமும், வோடபோன் ஐடியா தவிர்த்த ஆதித்யா பிர்லாவின் மற்ற நிறுவனங்கள் 51 சதவீதத்தையும், வோடபோன் ஐடியாவின் 27 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் ஆதித்ய பிர்லா நிறுவனம் உச்சவரம்பு ஆதாயமாக 50 சதவீதம் ஈட்டி இருக்கிறது. ஒட்டுமொத்தக் கணக்கீட்டில், டாடா குழுமம் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவின் முன்னணி வணிகக் குழுவாக 22.35 டிரில்லியன் மதிப்பில் 42 சதவீத ஆதாயம் ஈட்டியுள்ளது.
அதே காலகட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தையிலிருந்து 23 சதவீத ஆதாயமீட்டி இருக்கிறது. பங்குச் சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தைக் காணும் நேரத்தில், இந்திய பெருநிறுவனங்கள் செல்வ மதிப்பில் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் சென்செக்ஸ் 21.7 சதவீதமும், அதே காலகட்டத்தில் நிஃப்டி 23.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்டப் பெருநிறுவனங்களும் சந்தையில் நிகழும் இந்த ஏற்றத்தைப் பணமாக்க மூலதன சந்தைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
அதானி குழுமம், அதானி வில்மரின் IPO வைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைத் துணை நிறுவனத்தைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.ஆதித்யா பிர்லா குழுவும் அதன் பரஸ்பர நிதிப் பிரிவைப் பட்டியலிட ஆலோசனை செய்து வருகிறது. இந்தப் பட்டியலிடல் மூலம்,இலாபங்கள் மற்றும் வருவாய்களின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் இந்த பிரிவுகள் தங்களது சந்தை மதிப்பை சீறிய முறையில் உயர்த்திக் கொள்ளும்.