சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை சரிந்தது.சீன நிலவு புத்தாண்டு காரணமாக அந்நாட்டு கச்சா எண்ணெய் சந்தை விடுமுறை என்பதால் கச்சா எண்ணெய் வாங்க ஆர்வம் குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 46சென்ட் சரிந்து 87 டாலர் 17 சென்ட் ஆக விற்கப்பட்டது. அமெரிக்க கச்சா எண்ணெய் 40 சென்ட் குறைந்து 81 டாலர் 24 சென்ட் ஆக குறைந்துள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான சீனாவில் நுகர்வு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் கச்சா எண்ணெய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில் புதிய விலை வரும் 5-ம் தேதி முதல் அமலாகிறது. கச்சா எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழையபடி சந்தைக்கு வரும்பட்சத்தில் மிக அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கச்சா எண்ணெய் விலை நிலைபெறும் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் விலைக்கு உச்சபட்ச விலை அளவு நிர்ணயிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.