போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த அறிவிப்பு, நேரடித் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த பல்வேறு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிரேசிலில் ஃபோர்டு மூடப்பட்டபோது இழப்பீடு வழங்கியதைப் போல தங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க குறிப்பிட்ட காலத்துக்கு ஆதரவு வழங்குமாறு அவர்கள் தமிழக அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“போர்ட் நிறுவனத்துக்காக மட்டுமே உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த நிறுவனங்கள் கடுமையான பாதிப்படைந்திருக்கும் சூழலில், பிற எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களும் தங்கள் வருமானத்தில் 15 முதல் 30 சதவிகிதம் வரை நஷ்டமடைவார்கள்” என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தி.அன்பரசன் மற்றும் எம்.எஸ்.எம்.இ – துறை செயலாளர் அருண்ராய் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
“ஃபோர்டு நிறுவனம், டிசம்பர் வரையிலான காலத்தில் 30,000 ஈக்கோஸ்போர்ட் கார்களை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்துள்ளது, ஒருவேளை அப்படி நடந்தால் அதற்குள்ளாக எங்களிடம் இருக்கும் மூலப்பொருட்களை வைத்து தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய முடியும், ஃபோர்டு நிறுவனத்துக்காக நாங்கள் நிறைய முதலீடுகள் செய்திருக்கிறோம், பிரத்யேகமாக பணியாளர்களை நியமித்திருக்கிறோம், தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் வருமானத்தில் 15 முதல் 20 சதவிகிதம் வரை நஷ்டம் ஏற்படக்கூடும், பிற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த முதலீட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் திட்டமிட வேண்டும், பிரேசிலில் ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டபோது உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்கியது, அதுபோல அவர்கள் இந்தியாவிலும் இழப்பீடு வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ” என்கிறார் இரண்டாம் நிலை உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனமான ஆல்ஃபா ரப்பர் & ஸ்பிரிங்ஸ் லிமிடெட் பிரதிநிதி ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளாக ஃபோர்ட் இந்தியாவுக்கு இணைப்பு ராடுகளை சப்ளை செய்து வரும் 80 கோடி மதிப்பிலான மற்றுமொரு நடுத்தர நிறுவனம் “எங்கள் மொத்த உற்பத்தியில் 1/5 பங்கு ஃபோர்டு இந்தியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, எங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்கிறது.
ஃபோர்டு நிறுவனத்துக்கு ப்ளோ மோல்டிங் பாகங்களைத் தயாரித்து வழங்கும் அபிஜீத் ரானே பாலிமர்ஸ் நிறுவனம், “ஃபோர்டுக்காக நாங்கள் தயாரிக்கும் உதிரி பாகங்கள் பிரத்யேகமானவை, அவற்றை பிற நிறுவனங்களுக்கு சப்ளை செய்ய முடியாது, எங்கள் மொத்த வருமானம் 2.2 கோடி ரூபாய், இதில் ஃபோர்டுக்கான சப்ளையில் இருந்து மட்டும் நாங்கள் 1 கோடி வரை வருமானமீட்டுகிறோம், ஃபோர்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதால் 180 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருக்கிறது” என்று கவலை தெரிவிக்கிறது.
“ஃபோர்டு இந்தியா உற்பத்தியை மூடுவதன் மூலம் எங்கள் வருமானத்தில் சுமார் 80 சதவீதத்தையும் (₹80 கோடி), 200 ஊழியர்களையும் நாங்கள் இழக்க வேண்டியிருக்கும், எங்களுக்கு ₹25 கோடி அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், வேலை இழப்புகளை நாங்கள் ஈடுசெய்ய வேண்டும். நாங்கள் ஃபோர்டிடம் இருந்து குத்தகைக்கு வாங்கிய நிலத்தில் செயல்பட்டு வருகிறோம். ஃபோர்டு இந்தியா வெளியேறிய பிறகு எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை? இது குறித்து ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை” என்கிறார் கடந்த 24 ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்துக்கு எரிபொருள் மற்றும் பிரேக் பாகங்களை வழங்கி வரும் எஸ்.எஃப்.எஸ் சொல்யூஷன்ஸ் பிரதிநிதி ஒருவர்.
மாநில தொழில்துறை அமைச்சர் டி.அன்பரசன் இது குறித்து கூறுகையில், “ஃபோர்டு இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைந்து செயல்பட்டார், ஃபோர்டு தொழிற்சாலையை வாங்குவதற்கு வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால் அதற்கான ஒத்துழைப்பை அரசு வழங்கும், தொழிலாளர் சங்கங்களிடமிருந்து வந்திருக்கும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறது” என்கிறார். பல ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்தை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சிறு, குறு நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.