மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அமெரிக்க முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் ஜில்பிரஜீன், இவர் தங்கள் நாட்டில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிக்கு ஆட்களை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை எச்ஆர் ஊழியர்களுக்கு அறிவுறுத்த நிர்பந்திக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஜில் அமெரிக்காவில் இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில்,குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களையும்,50 வயதுக்கும் மேற்பட்டவர்களையும்,இந்திய பூர்விகம் கொண்டவர்களையும் பணியில் சேர்க்க வேண்டாம் என நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 21 நாட்களில் இன்போசிஸ் நிறுவனம் பதில் அளிக்கவும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 59 வயதான தம்மை இன்போசிஸ் திடீரென காரணமின்றி நீக்கியதாகவும் பிரஜீன் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வயது,பாலினத்தை வைத்து பாரபட்சம் காட்டுவதாக இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் மீது 4 பெண்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அடுத்தடுத்த புகார்களால் இன்போசிஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.
சிறப்பாக பங்குதாரர்களுக்கு பணத்தை அளிக்கும் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களை இப்படி நடத்தலாமா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
செப்டம்பரில் மட்டும் அந்த நிறுவனம் டிவைடண்ட் ஆக 620% பங்குதாரர்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.