பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும்.
ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன் வருகிறது. இதன் பேட்டரியை தேவைப்படும்போது வெளியில் எடுத்து சார்ஜ் செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் வாங்க முடியும். இது மிகவும் மலிவு விலையில் இருக்கும். பேட்டரியை மாற்றும் போது பணம் செலுத்தினால் போதும். பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை விட பேட்டரி பொருத்தாத வண்டி 40% மலிவு என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. புதிய இன்பினிடி இ-வாகனத்தின் மேலதிக விவரங்கள் குறித்து நிறுவனம் வாய்திறக்கவில்லை.
ஆண்டுக்கு 1,80,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவாடியில் கொண்டுள்ளது மற்றொரு ஆலையை தென்னிந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரி இல்லாமலும் விற்பனைக்கு வரும் முதல் இ-ஸ்கூட்டர் என்ற முறையில் சந்தையில் இதற்கான வரவேற்பைப் பொறுத்து மற்ற நிறுவனங்களும் போட்டியில் குதிக்கலாம் என்று வாகன சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
எது எப்படியோ, இனி வரும் காலம் மின்சார வாகனங்களின் காலம் என்பதை மட்டும் மறுக்க முடியாது.