நடப்பு நிதியாண்டில் , GDP எனப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5% இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இந்திய பொருளாதாரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
ஒமைக்ரான் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, நிதிநிலை குறியீடுகள் மற்றும் நிதித்துறை, மருத்துவத்துறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 8 முதல் 8.5% வரை இருக்கும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், அதன் இறக்குமதி காரணமாக இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கக் கூடும் என்பதால், பணவீக்கம் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இந்திய வணிகம் மீண்டு வரும் நிலையில், ஒமைக்ரான் பரவலால் நாட்டின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி 11.8% இருக்கும்.
நம் நாட்டின் சேவைத்துறை 2021-22-ம் நிதியாண்டில், 8.2% வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.