டிவிட்டர் நிறுவனத்தை மிகப்பெரிய தொகைக்கு தெரியாமல் வாங்கிவிட்டோமோ என வருத்தப்பட்டு வரும் எலான் மஸ்க், கடந்த சில நாட்களாக ஆப்பிளுக்கு எதிராக தொடர் புகார்களை தெரிவித்து வந்தார். மறைமுகமாக ஆப்பிள் நிறுவனம் வரி வசூலிப்பதாகவும், ஆப்பிள் நிறுவனம் டிவிட்டருக்கு விளம்பரம் தருவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக உள்ள டிம் குக்கை மஸ்க் திடீரென சந்தித்தார். அப்போது பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தாகவும், ஆப்பிள் நிறுவன விதிகளை குக் தமக்கு தெளிவுபடுத்தியதாகவும் எலான் மஸ்க் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிம் குக்குக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்தும் மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்க இருப்பதாக தகவல் கசிந்த நிலையில் வேறு வழியில்லை என்றால் புதிய ஸ்மார்ட் போனையே உற்பத்தி செய்வேன் என்று மஸ்க் தெரிவித்திருந்தார் ஆனால் திடீர் பல்டியடித்த எலான் மஸ்க், டிம் குக்குடன் ராசியாகியுள்ளார்.