HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. கோடக் மஹிந்திரா வங்கி, HDFC வங்கி மற்றும் சிங்கப்பூரின் DBS வங்கிகளுக்கிடையேதான் இறுதிப்போட்டி நிலவும் என்றும் அந்த செய்தியில் கூறப்படுகிறது.
சிட்டி வங்கியின் – இந்திய சில்லறை வங்கிப் பிரிவு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானமீட்டக்கூடியது
“ஐந்து வங்கிகள் இதுவரை முன்னணி வாய்ப்புள்ளவையாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அடுத்த கட்டமாக அதிகபட்ச விலை கொடுக்க முன்வரும் மூன்று வங்கிகளுடன் சிட்டி-இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடும் என்று போட்டியாளர்களில் ஒருவர் தெரிவித்திருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் கூறுகிறது. சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வணிகம் மிகப்பெரிய அளவிலான வணிகத்தைக் கட்டுப்படுத்துவதால் இன்னும் சிறந்த வாய்ப்புக்காக வங்கி காத்திருக்கிறது.
DBS வங்கியைப் பொறுத்தவரை, சிட்டி வணிகத்தைக் கைப்பற்றினால் இந்தியாவில் பெரிய அளவில் கால்பதிக்க உதவிகரமாக இருக்கும். “நாங்கள் சந்தையில் வெற்றிகரமாக இயங்கும் வணிகங்களை வளமான வாய்ப்புககள் வரும்போது மேம்படுத்த விரும்புகிறோம். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வாய்ப்பையும் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை” என்கிறார் DBS வங்கியின் செய்தித் தொடர்பாளர்.
கோடக் மஹிந்திரா வங்கி இதுகுறித்துக் கருத்துக் கூற மறுத்து விட்டது. HDFC வங்கியும், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கிகளும் பதிலளிக்கவில்லை.
சிட்டி இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், வங்கிக்கான போட்டியைக் குறித்து கருத்துக் கூற மறுத்து “சிட்டி-இந்தியா தொடர்ந்து தங்கள் வணிக உறுதிமொழிகளைக் காப்பாற்ற உறுதியோடு இயங்கும். ஆனால், வங்கியின் வணிகத்தைக் கைப்பற்ற ஆர்வம் கொண்ட போட்டியாளர்களை நாங்கள் பார்க்கிறோம். இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான செயல்பாடுகள் மாதக்கணக்கில் நடைபெறலாம், மேலும் ஆர்வமுள்ள நிறுவனங்களோடு தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது” என்கிறார்.
13 முக்கியமான பொருளாதார சந்தைகளில் இருந்து வெளியேறி மூலதனத்தை அதிகரிக்கவும், லாபம் தரும் வணிகங்களில் அதிக கவனம் செலுத்தவும் சிட்டி வங்கி திட்டமிடுகிறது. சிட்டி நிர்வாகத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேன் பிரேசர், “நாங்கள் வெளியேறுவதற்கான வேலைத்திட்டங்களில் இருக்கிறோம். சரியான நேரத்தில் அது நடக்கும். ஆனால், இது மிக அவசரமான ஒரு விற்பனை அல்ல” என்கிறார்.
“களத்தில் உள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் போட்டியை முன்கூட்டியே தடுக்க விரும்புகிறார்கள் மேலும் போட்டியில் உள்ள பிற வங்கிகள் பெரிய சந்தைப்பங்கைக் கைப்பற்றும் சூழ்நிலையை தவிர்க்க விரும்புகிறார்கள்,” என்கிறார் வேறொரு வங்கித் துறையைச் சேர்ந்தவர். “சில வங்கிகளுக்கு நல்ல லாபமளிக்கும் “கிரெடிட் கார்டு” வணிகமானது பொருத்தமானதாகவும், செலவுகளைக் குறைக்கவும் பயன்படும் என்கிறார் அவர்.
லாபத்தைப் பொறுத்தவரை சிட்டியின் வாடிக்கையாளர் வணிகமானது, ஒட்டுமொத்த இந்திய வணிகத்தில் மூன்றாம் இடத்திலும், இந்தியாவில் சிட்டியின் வணிகம் உலக அளவில் 1.5 % லாபம் தருவதாகவும் இருக்கிறது. சிட்டி இந்தியாவின் வங்கி வணிகமானது கிரெடிட் கார்டுகள், வைப்பு நிதிக் கணக்குகள், சொத்து மேலாண்மை மற்றும் மோர்ட்கேஜ் போர்ட்போலியோக்களை உள்ளடக்கியது. முன்பணம் மற்றும் வைப்பு நிதியில் முறையே 0.6 % மற்றும் 1.1 % சந்தைப் பங்கீட்டைப் வைத்திருக்கிறது.
இந்தியாவில் சிட்டி வங்கியானது 28 லட்சம் வாடிக்கையாளர்களையும், 12 லட்சம் வங்கிக் கணக்குகளையும், ஏறத்தாழ 26 லட்சம் கிரெடிட் கார்டுகளையும் வைத்திருக்கிறது. துறையிலிருந்து வெளியேறும் அறிவிப்புக்குப் பிறகு 1 லட்சம் வாடிக்கையாளர்களை வங்கி இழந்திருக்கிறது. மார்ச் 2020 கணக்குப்படி சிட்டி வங்கிக்கு நாடெங்கும் 35 கிளைகளும் 1.6 லட்சம் கோடி முதலீடுகளும் உள்ளது.