வரும் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை (GST) வரிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, மாநிலங்களுக்கான வரி இழப்பீட்டுத் தொகை முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரி அடுக்கு மறுசீரமைப்பு மற்றும் விலக்குகளை குறைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி, 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு வரிகளுக்கு மாற்றாக மூன்று முக்கிய வரி விகிதங்களைக் கொண்டிருக்கும். இது மறுசீரமைப்பை எளிமைப்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் முயற்சி செய்யும் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.
“கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வருவாய் சூழ்நிலைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. ஜூலை மாதத்திற்குப் பிறகு நிலைமையை மாநிலங்கள் எவ்வாறு சமாளிக்க விரும்புகிறது என்பதை இப்போது பார்க்க வேண்டும்” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடுசெய்கிறது – அது அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்த இழப்பீடு முடிவடைந்தவுடன் மாநிலங்கள் தங்கள் வருவாயில் கணிசமான சரிவைக் குறித்து கவலையடைந்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில், ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல விகிதக் குறைப்புகளின் காரணமாக, ஜிஎஸ்டியின் கீழ் வரி விகிதம் அசல் வருவாய் நடுநிலையான 15.5% இல் இருந்து “தெரிந்தோ தெரியாமலோ” 11.6% ஆக சரிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். தற்போது வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டின் பட்டியலை 5% மற்றும் 12% வரிகளை ஒன்றிணைத்து ஒரு விகிதத்தை உருவாக்குவதும், 18% மற்றும் 28% ஆகிய மூன்று அடுக்கு ஆட்சியை உருவாக்குவதும் ஒரு விருப்பமாகும்.
சமீபத்திய மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் வசூல் அதிகரித்து வருவதால், மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலால் எடுக்கப்படவுள்ள இறுதிப் பரிந்துரைகள் குறித்த விவரங்களைப் பற்றி விவாதிக்க அமைச்சர்கள் குழு சனிக்கிழமை கூடுகிறது. கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஊக்கமளிக்கும் போக்கைக் காட்டுவதால், விகிதக் கட்டமைப்பை எளிமைப்படுத்த இதுவே சரியான நேரமாக இருக்கலாம் என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர்.