1981 கோடையில், தன்னை “ஆலோசகர்” என்று அழைத்துக் கொண்ட ஒரு மனிதர் இந்தியாவின் மேற்கு நகரமான மும்பையில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அந்தப் பெண் ஒரு சிறு தொழிலைத் தொடங்க இருந்தார். எப்படியாவது லஞ்சம் கொடுத்தாவது எனக்கு ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற்றுத் தர முடியுமா என்று அந்த மனிதரிடம் கேட்டார் அந்தப் பெண். சில ஆண்டுகளுக்கு முன்பாக இது ஒரு இயல்பான விஷயமாக இருந்தது. தொலைபேசி இணைப்பு என்பது அரசின் ஏகபோகமாக இருந்த காலமது. 1980களின் மையப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் தொலைபேசி இணைப்புகளுக்காகக் காத்திருந்தனர்.
ஜூலை 1991 க்கு முன்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் கதவுகளைத் திறந்தபோது அத்தகைய “ஆலோசகர்கள்” நாட்டின் பல்வேறு அலுவலகங்களுக்கு வெளியே சுற்றித் திரிந்தனர். ஒரு பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இணைப்புகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை இவர்கள் பெற்றுத் தந்தார்கள். அவர்கள் இல்லையென்றால், இந்தியர்கள் எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு ஸ்கூட்டருக்காக 10 ஆண்டுகள், ஒரு காருக்காக ஏழு ஆண்டுகள் வரை காத்திருந்தனர். ஒரு கட்டுரையாளர் தனது முதல் குழந்தைக்கு பால் பவுடர் பெற எப்படியெல்லாம் முயற்சி செய்ய வேண்டியிருந்தது என்பதைப் பற்றி எழுதினார்.
மும்பை பெண்ணைப் பொறுத்தவரை, ஆலோசகரின் கட்டணம் ₹15,000. இந்தத் தொகையானது அவரது மாத வருமானத்தை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். இந்த பணத்தின் ஒரு பகுதி கமிஷனாக ஒன்றிய அமைச்சரின் குடும்பத்திற்கு செல்லும் என்பதால் தொகை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். “அவர்கள் உங்களுக்கு இணைப்பை வழங்க லஞ்சம் வாங்குவார்கள்,” என்று அவர் கூறினார். தனது அடையாளத்தைக் காட்ட விரும்பாத அந்தப் பெண், தனது சேமிப்பில் இருந்து ஆலோசகருக்கு பணம் கொடுத்தார். இரண்டு வாரங்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு புதிய இணைப்பு கிடைத்தது.
“1991 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய நுகர்வோரை மோசமான பொருட்கள் மற்றும் சேவைகள், கட்டுப்படியாகாத விலை, கணக்கில் வராத பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வணிகச் சூழலில் இருந்து விடுவித்தன” என்று நிர்வாக ஆலோசகர் ராம பீஜபுர்கர் கூறுகிறார். ஒரு நெருக்கடி பெரும் மாற்றங்களை நோக்கி நம்மைத் தள்ளியது. அந்நியச் செலாவணி இருப்பு (foreign exchange reserves) குறைந்து இருந்தது. பொதுக்கடன் வீக்கமடைந்து பலூன் போல ஆகியிருந்தது. பணவீக்கம் (inflation) இரட்டை இலக்கத்தில் இருந்தது. சுருக்கமாகவும், இன்னும் புரியும்படியாகவும் சொன்னால், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகி இருந்தது.
எனவே, அரசாங்கம் பல ஆண்டு கால சோசலிசப் பொருளாதாரத்தை (socialism) ஒரே இரவில் மாற்றியமைத்தது. அது எளிய பரிமாற்றங்களை முடக்கும் உரிமங்களை அகற்றியது. தனியார் நிறுவனங்களையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சந்தையில் அனுமதித்தது. ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரிகளை (import duties) குறைத்தது. இந்தியாவின் பொருளாதாரம் இன்று $ 2.66 ட்ரில்லியன்; 1991 க்குப் பிறகு இது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று $2,097 இல் இருக்கும் வருடாந்திர சராசரி வருமானம் (annual average income) கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்படி (United Nations Development Programme), 2005 முதல் 2016 வரை, 270 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் கடுமையான வறுமையில் இருந்து மேலேறி வந்தார்கள்.
1991ல், 840 மில்லியன் இந்தியர்களில் சுமார் ஐந்து மில்லியன் பேர் மட்டுமே தொலைபேசிகளை வைத்திருந்தனர். பல தொலைபேசி பரிமாற்று அறைகள் (telephone exchanges) அரை நூற்றாண்டு பழமையானவை. எனவே, நீங்கள் ஒரு தொலைபேசி சொந்தமாக, அதிர்ஷ்டம் கூடி வந்தாலும், அது பெரும்பாலும் வேலை செய்யாது. கோபமடைந்த சந்தாதாரர்கள் தங்கள் “இறந்த” தொலைபேசிகளுக்கான இறுதிச் சடங்கு சேவைகளை அறிவிக்கும் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டார்கள். வேலிகள் உடைக்கப்பட்ட போது, மக்கள் மற்றவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்க மணிக்கணக்கில் செலவழித்தனர்.
நீண்ட தூர அழைப்புகளை செய்வது ஒரு “சகிப்புத்தன்மையுடன் நாம் ஆடுகிற விளையாட்டு” போன்றது என்று கட்டுரையாளர் சந்தோஷ் தேசாய் கூறினார். நீங்கள் காலையில் ஒரு அழைப்பை பதிவு செய்தீர்கள் என்றால், சில நேரங்களில் மாலையில் இணைக்கப்படும். அது இணைக்கப்பட்டாலும் உங்களால் எதிர்முனையில் பேசுபவரின் குரலையே சரியாகக் கேட்க முடியாது. உரையாடலில் பாதி புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது, கூச்சலும், இரைச்சலுமாக அந்த உரையாடல் இருந்தது,” என்று தேசாய் கூறுகிறார்.
அதிகப்படியான கட்டணம் இயல்பாக இருந்தது. ஒரு அமைச்சர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தபோது ₹18,000 பில் செய்யப்பட்டதாக புகார் கூறினார். இன்று இந்தியாவில் மட்டும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். உள்ளூர் அழைப்புகள், மெஸேஜ் மற்றும் இணைய டாட்டா (internet data)ஆகியவை உலகின் மலிவான இடங்களில் இந்தியா முக்கியமான இடத்தில இருக்கிறது. இன்கம்மிங் அழைப்புகள் இலவசம். ஸ்மார்ட் போன்கள் ₹5,000 குறைவான விலையில் கிடைக்கின்றன.
“ஒரு காலத்தில் வங்கிக்குப் போய் வருவது பல் மருத்துவரிடம் செல்வது போல் இருந்தது” என்கிறார் பொருளாதார நிபுணர் ஓம்கார் கோஸ்வாமி. 1990 களின் தொடக்கத்தில் வங்கிச் சேவையின் மோசமான நினைவுகளை பகிர்கிறார். வரிசையில் நின்று நீங்கள் ஒரு டோக்கன் பெறவேண்டும். பின்பு டெல்லர் உங்கள் எண்ணை சத்தமாக அழைப்பார். நீங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியிலிருந்து தப்பித்து ஓடுவதற்கு விரைவீர்கள், என்று டாக்டர் கோஸ்வாமி நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார்.
இன்று, நாடு முழுவதும் உள்ள 200,000 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க இந்தியர்கள் 820 மில்லியனுக்கும் அதிகமான டெபிட் கார்டுகள் மற்றும் 57 மில்லியன் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. 2019 இல், மொபைல் பரிவர்த்தனைகள் 163% உயர்ந்து, $286 பில்லியன் அளவை எட்டி இருக்கிறது. S&P Global Market Intelligence கணக்கின்படி.வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30 ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. வங்கிகள் இப்போது நண்பர்களின் வீடுகளைப் போல இருக்கிறது.
விமானங்கள் எப்படி சுகாதார அபாயமாக மாறி இருந்தன
இது 1988 இல் இந்தியாவில் விற்பனையான ஒரு பத்திரிகையில் வந்த செய்தி. அந்தக் காலத்தில் ஒரே ஒரு உள்நாட்டு விமான சேவை நிறுவனமான அரசுக்கு சொந்தமான இந்தியன் ஏர்லைன்ஸில் ஒரு டிக்கெட் பெறுவது எளிதானது அல்ல. விமான நிலையங்கள் அலங்கோலமாக காட்சி அளித்தன. நீண்ட வரிசைகள் எல்லா நிலையங்களிலும் இருந்தது. செக்-இன் செய்யும் ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். திடீர் வேலைநிறுத்தங்கள் காரணமாக விமானங்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன. சண்டைகள் வெடித்தன. பயணிகள் சில நேரங்களில் ஓடுதளங்களில் ஓடி ஒரு விமானத்தின் கீழ் நின்று போராட்டங்களை நடத்தினர்.
விமானத்தில் உணவு அற்பத்தனமாகவும், சலிப்பாகவும் இருந்தது. “ஒவ்வொரு அதிகாலை விமானத்திலும் இட்லி சாப்பிட்டதில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது” என்று 1980களில் ஒரு தொழிலதிபர் கூறியதாக ஒரு நாளிதழ் மேற்கோள் காட்டியது. ஆனால் சீர்திருத்தங்கள் தனியார் நிறுவனங்களுக்குக் கதவைத் திறந்தன. 2015 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தை 13 தனியார் விமான நிறுவனங்களுடன் பத்து மடங்குக்கும் அதிகமாக வளர்ந்தது. சுமார் 125 மில்லியன் பயணிகள் 2015 இல் இந்தியாவிற்குள் பறந்தனர். மேலும் 47 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்குப் பறந்தனர்.
வாரம் இரண்டு முறை கல்விக்கான ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின. தொலைகாட்சி 1959 இல் இந்தியா வந்தது. தினசரி ஒலிபரப்புகள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு மணி நேர தேசிய ஒளிபரப்புடன் தொடங்கின. இவை பெரும்பாலும் செய்தி அறிக்கைகளால் ஆனவை. இவை அனைத்தும் அரசுக்கு சொந்தமான ஒரே சேனலில் ஒளிபரப்பப்பட்டது. மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக, இந்தியர்கள் தூர்தர்ஷனை சகித்துக் கொண்டனர்.
இந்திய தொலைக்காட்சி சந்தாக்கள் (TV subscriptions) இப்போது 926 தனியார் சேனல்களை வழங்குகின்றன. இதில் 15 மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட செய்தி சேனல்கள் அடங்கும். நூற்றுக்கணக்கான மில்லியன் குடும்பங்களுக்கு இன்று தொலைக்காட்சி ஒரு இயல்பான விஷயமாக மாறிவிட்டது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் கூற்றுப்படி, முப்பது ஆண்டுகால பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவை “பற்றாக்குறையின் பொருளாதாரத்திலிருந்து போதுமான பொருளாதாரமாக” மாற்றியுள்ளது. இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
ஆனால் கடுமையான சவால்கள் நமக்கு முன்னே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி கடுமையாக குறைந்துள்ளது. மேலும் பெருந்தொற்று ஏற்கனவே நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை கடுமையாக சிதைத்து விட்டது. உலகளாவிய, எளிதாக வர்த்தகம் செய்யும் குறியீடுகளில் (global ease of doing business indexes) இந்தியா இன்னும் போதுமான வளர்ச்சியை எட்டவில்லை. உற்பத்தி தேக்கமடைந்துள்ளது. நிலம், மின்சாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரிய சீர்திருத்தங்கள் கிடப்பில் உள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், வரி செலுத்துவோரின் பணத்தை தொடர்ந்து அழித்தும், வீணடித்து வருகின்றனர்.
வங்கி வைப்பு (bank deposits) நிதி வீக்கமடைந்திருக்கிறது. ஆனால் கடனில் மூழ்கிய வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. இது குறைந்த அளவில் தனியார் முதலீட்டிற்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் வரிசையில் நுழையும் பல மில்லியன் இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் இல்லை. நுகர்வோர் 1991 முதல் தொடர்ந்து “வெற்றி பெறும்” முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்று பீஜபுர்கர் கூறினார். “இந்த கோவிட்-19 பெருந்தொற்று வருமானம் மற்றும் நுகர்வுக்கு இடையே நீண்ட இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நுகரும் ஆசை பரவி அதிகரித்துள்ளது. நாம் திரும்பிச் செல்லும் பாதை மிகக் கடினமானது.”
Credits: BBC