தொழில் வளர்ச்சி மற்றும் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது தொழில்துறையினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கோவிட் -19 பெருந்தொற்றின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறு-குறு வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு ஆவலோடு இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி இருந்தார்கள்.
தொழில்துறையில் புதிய அறிவிப்புகளாக இன்றைய பட்ஜெட்டில் வெளியானது என்ன?
1) தேனி, திருநெல்வேலி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
2) திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் புதிதாக SIPCOT தொழிற்பேட்டைகள் துவங்கப்படும். இதற்கான முதல் தவணையாக ₹1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
3) வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் விழுப்புரத்தில் புதிய “டைடல் பார்க்” குகள்.
4) சென்னை நந்தம்பாக்கத்தில் புதிய நிதியத் தொழில் நகரம்.
5) 500 ஏக்கர் பரப்பளவில் கோயம்புத்தூரில் ராணுவத் தளவாட உற்பத்திப் பூங்கா.
மேற்கண்ட அறிவிப்புகள் தொழில் துறையினரால் குறிப்பிடத்தக்க திட்டங்களாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தவரும். இந்தியத் தொழில் முனைவோர் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ரகுநாதன் இந்த பட்ஜெட் குறித்து என்ன சொல்கிறார்?
“எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த பட்ஜெட் இது. புதிய வரிவிதிப்புகளும், விலை உயர்த்தல்களும் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு-குறு தொழில் சார்ந்த அறிவிப்புகளைப் பொறுத்தவரை மேலதிகக் கடன்களை வழங்குவது, சந்தை மூலதனத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வது, வரி வசூலை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகள் திருப்தி அளிக்கிறது. கொரானா தாக்குதலால் மிகப்பெரிய பாதிப்படைந்த வணிகர்கள் MSME யின் கீழ் இணைக்கப்பட்டிருப்பது நேர்மறையானது, ஆனால், நலிந்த துறைகளாக அடையாளம் காணப்பட்ட 52 துறைகளின் சார்பில் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கட்டணங்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் “Mortarium” குறித்து மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் மாநில அரசின் சார்பில் அந்தத் தொகையை வணிகர்களுக்கு வட்டியில்லாத கடனாக வழங்க வேண்டும். அரசு வங்கிகளுக்கு இந்தப் பணத்தை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது, தொழிற்கல்வியை முடித்து வருகிற புதிய 8 லட்சம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் 6 மாதங்களுக்கு ₹6,000 ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லாதது போன்றவை ஏமாற்றமளிக்கிறது” என்கிறார் ரகுநாதன்.