இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐடி துறை பணிகளை செய்யும் ஊழியர்கள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியுள்ளதாகவும் பெரிய நிறுவனங்களே புலம்புகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வீயூக்கள் அதிகப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
முன்னணி நிறுவனமான காக்னிசண்டில் மட்டும் நடப்பாண்டில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் உரிய ஆட்கள் கிடைக்காமல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை தேர்வு செய்யும் பணி நடத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேபோல் இன்போசிஸ்,டிசிஎஸ் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களும் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். கிளவுடு கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் துறைகளில் வேலைவாய்ப்பும் எதிர்கால வாய்ப்புகளும் கொட்டிக்கிடப்பதாக அந்த துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. இரண்டு மற்றும் 3ம் கட்ட நகரங்களில் இருந்து அதிக இளைஞர்களை எடுக்கவும் ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப பிரமிட் வடிவில் அடித்தளத்தை வலுவாக்க வேண்டியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி ஆட்கள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறுவதை தடுக்கும் நோக்கில் வலுவான கட்டமைப்பும், சிறப்பான பயிற்சியும் ஐடி நிறுவனங்களின் முக்கிய தேவையாக உள்ளது. கல்லூரிகளில் இருந்து பணிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லூரிகளுக்கு சென்று திறமையானவர்களை பணியில் அமர்த்துவதற்கு பெரிய அளவில் செலவும் தேவைப்படவில்லை என்பதால் ஐடி ஊழியர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நிறுவனங்களுக்கு லாபகரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.,