இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஐபிஓவை அரசாங்கம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை தொடர்ந்தாலும் எல்ஐசியின் ஐபிஓக்கனை விற்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில், வர்த்தகம் மற்றும் நிதிச் சந்தை பங்குதாரர்களுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
கச்சா எண்ணெய் மீதான வரி நிவாரணத்தை அரசாங்கம் பரிசீலிக்குமா என்று கேட்டதற்கு, “ சர்வதேச சூழ்நிலைகள் கவலை தருகின்றன. எங்களின் முக்கியமான கவலைகளில் கச்சா எண்ணெயும் ஒன்றாகும். இருந்த போதும் நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தேசிய பங்குச் சந்தையில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் குறைபாடுகள் குறித்து, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) சமீபத்திய உத்தரவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது, போதுமான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று சீதாராமன் கூறினார்.
எல்ஐசி ஐபிஓ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”எல்ஐசி ஐபிஓவிற்கான ஆர்வம் உள்ளது. நாங்கள் அதை திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்கிறோம்,” என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் எல்ஐசியின் 316.25 மில்லியன் பங்குகளை அல்லது கிட்டத்தட்ட 5% பங்குகளை விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.