எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன் கிளப்பில் புதிதாக நுழைந்த நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், பீபிசிஎல், டாபர், கோட்ரேஜ் கன்ஸ்யூமர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு டிரில்லியன் கிளப்பில் நுழைந்த 28 நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது சந்தையில் நீடித்த ஆதாயங்களின் இயல்பான பலன் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
“ஹை-ஃப்ரீக்வண்சி இண்டிகேட்டர்ஸ்” எனப்படும் உயர் அதிர்வெண் குறிகாட்டிகளில் எஃகு உற்பத்தி, சிமென்ட் உற்பத்தி, முக்கிய துறைமுகங்களில் கையாளப்படும் சரக்கு, வணிக வாகனங்கள் உற்பத்தி, ரயில்வே சரக்கு போக்குவரத்து, எண்ணெய் அல்லாத இறக்குமதி, சுற்றுலாப் பயணிகள் வருகை, உண்மையான வங்கி கடன் மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவை அடங்கும். இந்த உயர் அதிர்வெண் குறிகாட்டிகளின் முன்னேற்றம், உள்நாட்டு நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் உற்சாகமான பங்கேற்பு மற்றும் வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதிக்கட்டுப்பாட்டு தளர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து உள்நாட்டுப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றிய புது நம்பிக்கையானது ஆதாயங்களுக்கு வகுத்ததாக கருதப்படுகிறது.
ட்ரில்லியன் கிளப்பில், தேசிய அனல் மின் கழகம் (NTPC) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) போன்ற நிறுவனங்கள் மீண்டும் நுழைந்திருப்பதால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் “பவர் கிரிட் கார்ப்பரேஷன்” நிறுவனமும் இணைந்திருப்பது கூடுதல் நம்பிக்கை. கடந்த ஆண்டு இதே தேதியுடன் (YTD) ஒப்பிடுகையில் பங்குச் சந்தைகளில், சென்செக்ஸ் குறியீடு 17.5 சதவிகிதம் வளர்ந்துள்ள நிலையில், பொதுத்துறைகளின் குறியீடானது 30.6 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமும் (ONGC) ஏற்கனவே ட்ரில்லியன் கிளப்பில் இருக்கும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் அவை முறையே 49 சதவிகிதமும், 24 சதவிகிதமும் இந்தாண்டின் சந்தை மூலதன அளவில் உயர்ந்துள்ளன.
ட்ரில்லியன் கிளப்பில் பொதுத்துறை நிறுவன ஜாம்பவான்கள் நுழைந்திருப்பதற்குக் காரணம் முதலீட்டாளர்கள் மதிப்பு வீழ்ச்சியடைந்த பங்குகளைத் தேடுவதுதான் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். “பொதுத்துறைப் பங்குகளை மதிப்பிற்கு பொருத்தமான விலையில் வாங்குவது இப்போது சாத்தியமாகி இருக்கிறது” என்று எகியுனோமிக்ஸ் நிறுவனர் ஜி சொக்கலிங்கம் கூறுகிறார்.
பொதுச் சொத்து விற்பனை அறிவிப்புகளால் சந்தையில் ஒரு நேர்மறை நம்பிக்கை அதிகரித்திருப்பதும் இதற்கு இன்னொரு காரணம், என்.டி.பி.சி மற்றும் பவர்கிரிட் போன்ற நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கும், ட்ரில்லியன் கிளப்பில் நுழைவதற்கும் இந்த நம்பிக்கைகளே உதவி இருக்கிறது. வேறு சிலர் இது அரசு பணமீட்டும் பொருட்டும் சந்தையில் ஒழுங்கை ஏற்படுத்தவதற்காகவும் தனது பங்குகளை விற்றுவருவதால் ஏற்படும் நம்பிக்கையின் காரணமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
ட்ரில்லியன் கிளப்பில் 5 நிறுவனங்களோடு அதானி குழுமம் முன்னணி வகிக்கிறது, தொடர்ந்து டாடா குழுமம் 4 நிறுவனங்களோடு இரண்டாமிடத்தில் இருக்கிறது. டி.சி.எஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் சந்தை மூலதனத்தில் மிகப்பெரிய உயர்வைக் கண்ட நிறுவனங்களாகும், இந்த வரிசையில் டி.சி.எஸ் ₹ 2.8 ட்ரில்லியன், இன்போசிஸ் ₹ 2 ட்ரில்லியன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ₹ 1.7 ட்ரில்லியன் மற்றும் விப்ரோ ₹ 1.2 ட்ரில்லியன் மதிப்பில் சந்தை மூலதனமாகக் கொண்டிருக்கின்றன.