உலகின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், கார்பன் உமிழ்வைக் குறைக்க, தற்போதைய நிலையில் மின்சார கார்களை விட, ஹைபிரிட் ரக கார்கள் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் கார்கள் தான் உடனடி தீர்வு என்று நம்புவதாக கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்நிறுவனத்தின் தலைவர் பார்கவா, இயற்கை எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் தான், மின்சார கார்களை விட தூய்மையான எதிர்காலத்தை நோக்கி, நம்மை அழைத்து செல்லும் என்று கூறியுள்ளார்.
சிப்களின் கிடைக்கும் தன்மை மேம்படுவதால், மார்ச் 2023 – ல் முடிவடையும் ஆண்டில் 6 லட்சம் இயற்கை எரிவாயு கார்களை விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முந்தைய நிதியாண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மாருதி தற்போது 9 இயற்கை எரிவாயு மாடல்களைக் கொண்டுள்ளது என்றும், மேலும் இதுபோன்ற பல வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பயணிகள் கார்களை இயக்க, உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவது மற்றொரு மாற்றாகும். இருப்பினும் அதை வணிக ரீதியாக சாத்தியமானதாக மாற்றுவதற்கான முதலீடு குறைவாக உள்ளது என்றும் பார்கவா கூறியுள்ளார்.