உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களின்
விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவையும் பகைத்துக்கொள்ளாமல், உக்ரைனையும் பகைத்துக்கொள்ளாமல் எங்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்குமோ அங்கு வாங்கும் திட்டத்தில் இந்தியா கில்லாடியாக செயல்பட்டது. இந்த திட்டத்தால் வியப்படைந்த அமெரிக்கா, இந்தியாவின் திறமையை மிரட்சியுடன் பார்த்தது.
மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமே நம்பி இல்லாமல் இந்தியா கச்சா எண்ணெயை பல நாடுகளில் இருந்தும் வாங்கி வருகிறது.
நாட்டு மக்களுக்கு சிரமம் தராமல் எங்கு கச்சா எண்ணெய் மலிவாக கிடைக்குமோ அங்கு வாங்குகிறோம் அதில் என்ன
தவறு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளதற்கு ஆதரவு பெருகி வருகிறது.
கிடைத்தவரை லாபம் என்று ரஷ்யாவிடம் வாங்கிப்போட்ட கச்சா எண்ணெய் இந்தியாவில் கச்சாஎண்ணெய் சுத்திகரிப்பு
நிலையங்களில் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கியது நின்று போனதால் அடிமாட்டு விலைக்கு இந்தியா கச்சா எண்ணெயை வளைத்துப் போட்டுவிட்டது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவு கடந்த செப்டம்பர் மாதம் குறைந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு 16.2 விழுக்காடு குறைந்துள்ள அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து 4 %அதிக கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவைத் தொடர்ந்து தற்போது கனடா நாட்டிலும் கச்சா எண்ணெய் விலை மலிவாக கிடைப்பதால் இந்தியாவின் பார்வை தற்போது கனடா பக்கம் திரும்பியுள்ளது. அங்கிருந்தும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வாங்கப்படுவதால் இந்தியாவிற்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். ரஷ்யா,ஆப்ரிக்கா, பிரேசில்,கனடா,அரபு அமீரக நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்தால் ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் அவசியம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கனடாவில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.