HDFC வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, எச்டிஎஃப்சி வங்கி வங்கி தொடர்பான சேவையை பெருக்குவதற்காக டிஜிட்டல் 2.0 திட்டத்தை கொண்டு வந்தது. இந்த வங்கியின் தொழில்நுட்ப சேவைகள் குறித்து தொடர் சிக்கல்களும், புகார்களும் வந்ததால், HDFC வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டது.
டிஜிட்டல் 2.0 திட்டம், வர்த்தக பெருக்கம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தொழில்நுட்ப அப்ளிகேஷன்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை நிறுத்தும்படி எச்டிஎஃப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளிலும் நிலவும் சிக்கல்களை சரி செய்யும்படி எச்டிஎஃப்சி வங்கிக்கு அறிவுறுத்திய ஆர்பிஐ, அனைத்து புகார்களுக்கும் தீர்வு கண்டபிறகு, திருப்திகரமான செயல்பாடுகளை அமையும்போது, டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கு அனுமதி தரப்படும் என்றும் தெரிவித்திருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியின் உத்தரவில், HDFC வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கு கிரடிட் கார்டுகளை விற்பனை செய்ய அனுமதி அளித்தபோதும், டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கான தடைகளை நீக்கவில்லை. தங்கள் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட சிக்கல்களுக்கு HDFC வங்கி, அதன் முதலீட்டாளர்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரினர்.
இந்த நிலையில், HDFC வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறந்த சேவைகளை அளிப்போம் எனவும் எச்டிஎஃபிசி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலங்களில், வாடிக்கையாளர்களுடைய நீண்டகால, நடுத்தர மற்றும் குறுகிய திட்டங்களுக்கு ஏற்ப டிஜிட்டல் சேவைகளை வரைமுறைப்படுத்த பயன்படுத்தி கொண்டோம் எனவும் HDFC வங்கி தெரிவித்துள்ளது.