விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும்.
ஆரம்பத்தில் இந்த திட்டம் சிறப்பாக சென்றது. போகப்போக, இதில் முறைகேடுகள் நடக்க தொடங்கியதால், வங்கிகள் சீர்த்திருத்த நடவடிக்கைகளை கையாண்டன. இந்த நிலையில் கிசான் கிரிடிட் கார்டு என்ற திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.
வழக்கமாக வங்கிகளில் கிசான் கடன் அட்டை மூலம் கடன் பெற 2-4 வாரங்கள் வரையும், அதிக அலைக்கழிப்பும் ஏற்படுகிறது . இதனை தடுக்கும் நோக்கில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிசான் கிரிடிட் கார்டு திட்டம் இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பெடரல் வங்கியிலும், மத்திய பிரதேசத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிலும் சோதனை முறையில் இந்த திட்டம் அமலாகிறது.
ஊரக பகுதிகளில் தேவையற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு கடன் அளிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இரு மாநிலங்களில் கிடைக்கும் தரவுகளை வைத்து நாடு முழுவதற்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.