இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.
நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும், உயர்ந்த அப்பார்ட்மெண்ட்களும் பாதி கட்டப்பட்ட நிலையில் மழைநீர் வடிந்த கறைகளோடு விவசாய நிலங்களை வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றன, கட்டுமானத் தொழிலாளர்கள் இங்கு வந்து நெடுங்காலம் ஆகிறது, சிமிண்ட் கலவை எந்திரங்களும், கிரேன்களும் வேலை செய்வதை நிறுத்திப் பல காலமாகிறது. பல திட்டங்கள் கைவிடப்பட்டதைப் போலக் காட்சியளிக்கின்றன.
டெவலப்பர் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில் இதன் கட்டுமானப் பணிகள் 2016 இல் நிறுத்தப்பட்டது. 2,00,000 பேர் குடியேறவிருந்த இந்தக் குடியிருப்பில் வெறும் 40,000 மட்டுமே முடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. “கோல்ஃப் கிளப், ஜிம்கள், குளங்கள், ஷாப்பிங் மால் உணவகங்கள் எல்லாம் இருக்கிறது என்று விளம்பரப்படுத்தி எங்களிடம் குடியிருப்பு வீடுகளை விற்றார்கள், ஆனால், இங்கு எதுவுமே இல்லை” என்று குடியேறியவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள், டெவலப்பரான ஜேபி குழுமத்திடம் இருந்து பதில் ஏதுமில்லை.
ஜானகி ரே, என்பவர் 2009 இல் இந்தக் குடியிருப்பின் ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்குவதற்காகக் வங்கியில் கடன் வாங்கினார், கடந்த பத்தாண்டுகளாக தனது வாழ்நாள் சேமிப்பை இழந்தது மட்டுமில்லாமல், கடனுக்கு வட்டி கட்ட வேண்டும், இப்போது குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை கொடுக்க வேண்டும், தனது ஆடம்பர செலவுகளான வெளிநாட்டு சுற்றுலா, புதிய கார் வாங்குவது போன்றவற்றை அவர் விட்டுவிட்டார், இறுதியாக இப்போது வீட்டின் சாவி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால், அங்கே குடியேறும் திட்டத்தை அவர் தள்ளிப்போட்டிருக்கிறார், தன்னுடைய சொந்த செலவில் இன்டீரியர் செய்ய வேண்டும், அவர் இருக்கும் தளத்தில் எந்த வீட்டிலும் மனிதர்கள் குடியேறவில்லை, பாதுகாப்பு குறித்து அவர் பயப்படுகிறார்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் பேய் நகரங்களைப் போலக் காட்சியளிக்கிறது, வீடு வாங்குபவர்கள் இப்போது புது டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களின் புறநகர்ப்பகுதிகளை நோக்கித்தான் சென்றாக வேண்டும், அவர்களுடைய பட்ஜெட் புறநகர்ப் பகுதிகளுக்குத் தான் பொருந்துகிறது, ஆனால், பில்டர்களிடம் பணம் இல்லை, புதிதாகக் கடன் வழங்க வங்கிகள் தயாராக இல்லை, ஆயிரக்கணக்கானவர்கள் தாங்கள் கட்டிய பணத்துக்காக நீதிமன்றங்களில் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.
பெரும்பாலானவர்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள், கார்கள் வாங்குவது குறைந்திருக்கிறது, புதிய ஆடைகளைக் கூட அவர்கள் வாங்க விரும்பவில்லை, பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இது தீவிர நுகர்வு வீழ்ச்சியாக இப்போது மாறியிருக்கிறது, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக மார்ச் 31 இல் முடிவடையும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 5 % குறையும் என்று அரசு கணித்திருக்கிறது,
மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சர்விஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான டெபோரா டான் கூறுகையில், “இந்திய நுகர்வோர், பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள், அவர்கள் தங்கள் செலவுகளைக் குறைக்கத் துவங்கி இருக்கிறார்கள்” என்கிறார். நடுத்தர வர்க்க இந்தியர்களின் நம்பிக்கைகளை மீட்டெடுப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
10 கோடிக்கும் அதிகமான இந்தியாவின் நடுத்தர மக்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் மோடியை நம்பிக்கையோடு ஆதரித்தார்கள். வீடு வாங்குவதில் பணத்தைத் தொலைத்து விட்டு அவதியுறும் மனிதர்களைக் குறித்து அவர் தனது உரைகளில் குறிப்பிடுகிறார், இந்திய அரசு கடந்த மாதம் குறைந்த அளவிலான, சாத்தியமான திட்டங்களை மீண்டும் துவங்க $ 3.5 பில்லியன் நிதியை ஒதுக்குவதாக அறிவித்தது, ஆனால், பல பொருளாதார வல்லுநர்கள் இந்தத் தொகை போதாது என்கிறார்கள்.
மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் முயற்சிகளுக்குப் நடுவில் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையையே இந்த வீட்டு நெருக்கடி எதிரொலிக்கிறது, 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மக்கள் கடன் பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது, பன்னாட்டு மற்றும் பெரிய டெவலப்பர் மிகப்பெரிய குடியிருப்புத் திட்டங்களை முயற்சி செய்வதே கடினமானதாகவும், லாபம் இல்லாத ஒன்றாகவும் இருந்தது.
நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் கூட ஒரு வீட்டை வாங்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட அவர்களது ஓய்வு காலம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது, பிறகு 2000 களின் துவக்கத்தில் தாராளமயமாக்கல் மற்றும் பங்குச் சந்தைகள் பணம் திரட்டுவதை எளிதாக்கிய பிறகு வீடு வாங்குவதற்கான கடனைப் பெறுவது எளிமையானதாக மாறியது, வீடு வாங்குபவர்கள் பில்டர்களை ஆதரிக்கத் துவங்கினார்கள். நாடு முழுவதும், புதிய அடுக்குமாடி கட்டுமானத்தில் ஒரு மிகப்பெரிய திறப்பு ஏற்பட்டது.
மொத்தம் ஐந்து மில்லியன் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களைக் கொண்ட குடியிருப்பு வளாகங்கள் 2009 மற்றும் 2019 க்கு இடையில் தொடங்கப்பட்டன, ப்ராப் ஈக்விட்டி, எனும் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம், “இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வங்கிகளிலும், நிழல் வங்கிகள் என்று அழைக்கப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட் கடன்கள் நான்கு மடங்காக உயர்ந்து 70 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்தது”. என்கிறது
ஆனால், டெவலப்பர்கள், அரசு அனுமதிகளைப் பெறுவதிலும், தங்கள் திட்டங்களைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் சிக்கிக் கொண்டனர். மூன்று ஆண்டுகளில் கட்டப்பட வேண்டிய குடியிருப்புகள் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எடுத்துக் கொண்டன. பின்னர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு கடன்களின் அளவு அதிகரித்து வருவதைக் கண்டு அஞ்சி கடன் வழங்குவதை நிறுத்திக் கொண்டன, திட்டங்களுக்கான நிதி வறண்டு விட்டது. தொடர் தாமதங்களை இந்தக் காரணங்கள் மேலும் சிக்கலாக்கியது.
சமீபத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, 4,50,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கட்டி முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தாமதமான மொத்தத் திட்டங்களின் மதிப்பு 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும், திவாலான வீட்டுக் குடியிருப்பு திட்டங்களின் சுமையைக் கடன் வழங்குபவர்களின் வரவு செலவுப் புத்தகங்களில் இருந்து அகற்ற, ரியல் எஸ்டேட்டுக்காக மட்டுமே அரசாங்கம் “திவால் வங்கி”யை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய அரசு ஏற்கனவே நிதிச் சிக்கல்களில் போராடும் மாநில வங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி 2019 இல் மட்டும் ஐந்து முறை வட்டி விகிதங்களைக் குறைத்து, கடன் வழங்குபவர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
ப்ராப் ஈக்விட்டி நிறுவனர் சமீர் ஜசுஜா கூறுகையில், “தொழில்துறைக்கு அரசு உதவிப்பணம் மற்றும் உத்தரவாதங்கள் வழங்க வேண்டும், மேலும் பல்வேறு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்கள் தேவை, சாத்தியமான திட்டங்களை மீட்பதற்கு அரசு ஆதரவும், நிதியும் இல்லையென்றால் சிக்கல் மேலும் அதிகமாகும், இந்த சிக்கல் மிகப் பெரிதாக வளர்கிறது, மோசமான திட்டங்களுக்கு அதிக பணம் செல்லப் போகிறது,” என்று அவர் எச்சரிக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் தேவை அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தியது, பல புதிய குடியிருப்புகள் துவங்கப்பட்டது, விஷ் டவுனுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது, திவால் நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ஒரு புதிய டெவலப்பர் கிடைத்திருக்கிறார், அரசு அவரை ஆதரிக்கிறது, இன்னும் மூன்றுஆண்டுகளில் குடியிருப்பு வளாகம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என்கிறார்கள்.
ஜானகி ரே, தான் இப்போது குடியிருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக கட்டி முடிக்கப்படாத அடுக்குமாடிக் குடியிருப்புகளை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறார், பத்தாண்டுகளுக்கு முன்பாக ஆடம்பரமாக விளம்பரப்படுத்தப்பட்ட அந்தக் குடியிருப்பு வளாகத்தின் விளம்பர துண்டுப் பிரசுரம் அவரிடம் இன்னும் இருக்கிறது. அதில் “பசுமையும் அமைதியும் சூழ்ந்த குடியிருப்பு” என்று கவர்ச்சிகரமாக எழுதி இருக்கிறது, “இப்போது இங்கே பசுமையும் இல்லை, என்னிடம் இருந்த அமைதியும் பறிபோனது” என்கிறார் ஜானகி ரே.
Credits : Wall Street Journal