2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(SEPC) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வருவதாலும், கொரோனா அச்சுறுத்தல் குறைந்து, வழக்கமான சர்வதேச பயணங்கள் படிப்படியாக மீண்டும் தொடங்கியிருப்பதாலும், நடப்பு நிதியாண்டின் இறுதியில் சேவைகள் ஏற்றுமதி சுமார் 250 பில்லியன் டாலர்கள் அளவை அடையும் எனவும் கூறியுள்ளார்.
தொற்றுநோய் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த ஏற்றுமதியின் அடிப்படையில் சேவைத் துறை அதன் கடந்த ஆண்டு செயல்திறனில் 90-91 சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
சேவைகள் ஏற்றுமதி 8-9 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து வருகிறது என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறை உலகில் எட்டாவது இடத்திலும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளது எனவும் தலதி தெரிவித்தார்.