தமிழ்நாட்டில் சிவகாசியை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள், சிறு வயதிலிருந்தே தீபாவளி போன்ற பண்டிகைகளில் பட்டாசுகள் வெடித்து உற்சாகம் அடைந்தோம். பட்டாசு பெரும்பாலும் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
பெருந்தொற்றுக்கு முன்னர் பட்டாசு தொழிலில் நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு காலத்தில் சிவகாசி வேலைவாய்ப்புகளுடன் பிரகாசமாக இருந்தது. இப்போது அழிந்து போன அமானுஷ்ய நகரத்தைப் போலக் காட்சியளிக்கிறது.
“சென்ற வருடத்தில் மட்டும், குறைந்த பட்சம் 200 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஆலைகள், அதன் திறனில் 20-30 சதவிகிதம் மட்டுமே செயல்பட்டுவருகின்றன” என்கிறார் ஒரு பட்டாசு தொழிற்சாலை நிறுவனர்.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TANFAMA) தரவுகளின்படி, சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது 1,070 பட்டாசுத் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. கோவிட் தொற்று ஏற்படுவதற்கு முன், 2019-2020ல் பட்டாசு தொழில்துறையின் வணிக மதிப்பு 3,000 கோடியாக இருந்ததாக அந்த சங்கம் கூறுகிறது.
பெருந்தொற்றினால் மட்டும் இந்த அவல நிலை ஏற்படவில்லை. சுற்றுப்புற மாசும் ஒரு காரணம். பெருந்தொற்று பரவலின்போது மோசமான காற்று தரக் குறியீடு கொண்ட இடங்களில் பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த தடை 122 நகரங்களுக்கு பொருந்துவதாக உள்ளது.
சோனி ஃபயர் ஒர்க்ஸின் இயக்குனரும், TANFAMA வின் தலைவருமான பி கணேசன் இந்த வீழ்ச்சியால் மிகவும் கலக்கமடைந்துள்ளார். “இந்த தொழில்துறையின் அளவு கடந்த ஆண்டு 30 சதவிகிதமும், இந்த ஆண்டு மேலும் 20 சதவிகிதமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 50 சதவிகிதம் அல்லது 1,500 கோடி ரூபாய் விற்பனையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுவும், 120 நகரங்களில் அரசாங்கம் விதித்த தடையை நீக்கிக்கொண்டாள் மட்டுமே இது சாத்தியமாகும்” என்கிறார் கணேசன்.
“நாங்கள் வேலையில்லாமல் தவிக்கிறோம். பல வருடங்களாக இந்த வேளையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். விற்பனை இல்லை என்றால் எங்கள் வேலை பறிபோய் விடும்,” என்று குமுறுகிறார் தினசரி கூலியாக பணியாற்றும் முத்துலட்சுமி.
பட்டாசு சாலைகளில் வர்த்தகம் சரிந்துபோனதால், சிவகாசியை சார்ந்த அச்சக வணிகமும் சிரமத்திற்குள்ளாகிவிட்டது. சில கடைகளில் 80 சதவீத தள்ளுபடி கொடுத்தும் வணிகம் இல்லை என்று வர்த்தகர்கள் புலம்புகின்றனர். மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது என்கின்றனர் வேறு சிலர். “இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் மிகுந்த தள்ளுபடி கொடுத்து பட்டாசை விற்க வேண்டிய நிலைமை வந்துள்ளது” என்கிறார் பாலாஜி.
“தீபாவளி பிரகாசமாக இல்லை என்றால், சிவகாசியின் கதை அவ்வளவுதான்” என்கின்றனர் வணிகர்கள். பட்டாசு நகரத்தின் துயரங்கள் தீருமா? மத்தாப்புச் சிரிப்பு மலருமா? காலம் தான் பதிலளிக்க வேண்டும்