இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. கடந்த சில நாட்களாகவே அதீத ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் இந்திய பங்குச்சந்தை, குறிப்பிட்ட சில காரணங்களால், அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 443 புள்ளிகள் அதிகரித்து, 52 ஆயிரத்து 265 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 143 புள்ளிகள் அதிகரித்து, 15 ஆயிரத்து 556 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இன்று பங்குச்சந்தை அதிகரித்து இருந்தாலும், எதிர்வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. காரணம், அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் வரையிலான 9 மாத காலத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இந்திய பங்குச்சந்தைகள், தன்னுடைய உச்சத்தில் இருந்து 18 சதவிதம் சரிவுடன் தற்போது வர்த்தகம் ஆகி வருகிறது.
இந்த சரிவு, இனி மேலும் வர கூடிய காலங்களில் தொடர வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணமாக, அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, அதிகரித்து வரும் வட்டி விகித உயர்வு போன்றவை கூறப்படுகிறது. இதன் காரணமாக, இனி வர கூடிய காலங்களில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு, குறிப்பிட்ட சில மாதங்களுக்காவது குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு அதிகரித்து வருகிறது. ஆனால், எப்போது அந்நிய முதலீட்டாளர்கள வாங்க தொடங்குகிறார்களோ அன்று தான் ஆட்டம் தொடங்கும் என்றும், அது வரை இதே நிலை தான் தொடர வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.