பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வரிச்சுமை
முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
5ஜி சேவை
5ஜி கொண்டுவருவது குறித்துக் கூறுகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏலம் எதிர்பார்க்கப்படுகிறது, 23 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இது சாத்தியமாகும் என்றும் மிட்டல் கூறினார்.
வருவாய் இலக்கு
இந்த நிதியாண்டில் ₹ 200 ஏ.ஆர்.பி.யு.வை (ஒரு பயனருக்கான சராசரி வருமானம்) அடைவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இறுதி இலக்காக ₹ 300 ஐ எட்டுவதே நோக்கம் என்றும் அவர் கூறினார். கட்டண உயர்வு குறித்து அவர் கூறுகையில், “தொழில்துறையின் வெற்றிகரமான இயக்கத்தை அதிகரிக்கும் வகையில் துவக்க நிலை முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், 5ஜி விலை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், 5ஜி சார்ந்த சாதனங்களின் விலை விகிதங்களும் குறைந்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.
நிதி திரட்டல் திட்டம்
“ஏர்டெல் நிறுவனத்தின் ₹ 21,000 கோடி நிதி திரட்டும் திட்டங்கள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் , 5ஜி சேவைகள், ஃபைபர் மற்றும் டேட்டா சென்டர் வணிகத்தில் முதலீடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் பெரிய வாய்ப்புகளைப் பெறுவதற்குமான ஊக்கத்தை வழங்கும்” என்று மிட்டல் கூறினார். “ஏர்டெல் இந்தியாவின் புதிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஈட்டி முனையாக இருந்து இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த மூலதனம் நிறுவனத்திற்கான செயல்திறன் நிலையை மேம்படுத்த உதவும், அதே நேரத்தில் போட்டி மற்றும் லாபகரமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும், எங்கள் போர்ட்ஃபோலியோவின் பல பகுதிகளில் முதலீடுகளை முடுக்கிவிடவும் தேவையான ஊக்கத்தை இது வழங்கும்,” என்று மிட்டல் கூறினார்.
பார்தி ஏர்டெல் நிர்வாகக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கு ஒன்றிற்கு ₹535 என்ற விலையில், உரிமைப் பங்கு வெளீயிட்டின் மூலம் ₹21,000 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்தது. உரிமைப்பங்கு விகிதமானது 14 பங்கிற்கு ஒரு பங்கு எனும் விகிதத்தில் தகுதியுள்ள பங்குதாரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் பின்னர் அறிவிக்கப்போகும் தேதியின்படி இந்த கணக்கீடு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.