சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.