இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டதுதானா, தரமானதா என்பதை அரசு மீண்டும் ஒரு முறை திடீர் சோதனையை நடத்தி வருகிறது.
பல முன்னணி நிறுவனங்கள் மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை பெற்று மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றனர். இந்த சூழலில் பொதுமக்களுக்கு விற்றுவிட்ட இருசக்கர வாகனங்களை திடீரென மத்திய அரசின் கனரக தொழிற்சாலை அமைச்சகம் மற்றும் FAME அமைப்பினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் மானியத்தை பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதா இல்லை மானியத்தை பெற்றுக்கொண்டு சீன மலிவான பொருட்கள் பயன்படுத்தி வாடிக்கையாளர் தலையில் கட்டப்பட்டதா என்பதை மத்திய அரசு குழு ஆராய்ந்து வருகிறது.
பல நகரங்களில் இந்த பரிசோதனை மற்றும் ஆய்வுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.
சில புகார்கள் எழுந்ததால், ஹீரோ எலெக்டிரிக் மற்றும் ஒகினாவா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தில் குறிப்பிட்ட சில பங்கு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் திடீர் ஆய்வு வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உரிய சான்று பெற்று ஆலைகள் இயங்கி வந்தாலும் போதுமான தரக்கட்டுப்பாடுகளை தாண்டியும் போலிகள் சந்தையில் நுழைந்துவிடுவதை தடுக்கவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 23 நிறுவனங்கள் மத்திய அரசின் மானியத்தை பெற்றுக்கொண்டு மலிவான விலையில் இந்திய தயாரிப்பில் பேட்டரி வாகனங்களை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.