தொழில்நுட்பம் மற்றும் சேவையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்ற உள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவோம் என்று உறுதி அளித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களிடையே பேசிய சந்திரசேகரன், ஏர் இந்தியா தனது விமானங்கள் ஒவ்வொரு முறையும் குறித்த நேரத்தில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும், முன்பதிவு முதல் போர்டிங் வரை சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதன் மூலமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என ஏர் இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.
இதேபோல், தொழில்நுட்ப ரீதியாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் சந்திரசேகரன் கூறினார்.