ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தால் அரசு கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஏர் இந்தியாவை நடத்த அரசுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் இந்நிறுவனம் ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. பெரும் நஷ்டத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே ஏர் இந்தியா வை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்குச் செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து. டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. டாடா சன்ஸ் இடம் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய அமைச்சர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியாவை வாங்கியது குறித்து டாடா அறக்கட்டளைத் தலைவர் ரத்தன் டாடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டீவீட்டில் கூறியது,
“ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்க நிறைய உழைப்பு தேவை. ஏவியேஷன் துறையில் டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா பலமான வாய்ப்புகளைப் பெற்றுத்தரும்.
ஒரு காலத்தில் ஜே.ஆர்.டி டாடா தலைமையில் ஏர் இந்தியா சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்தது. இந்த பெயரை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு டாடாவுக்கு கிடைத்துள்ளது”