டாடா குழுமத்தில் இல்லாத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் டாடாவின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் டாடா நிறுவனம் தனது துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு தேவைப்படுவதை அடுத்து IPOஎனப்படும் ஆரம்ப பொது வெளியீட்டை அறிவிக்க இருக்கிறது. டாடா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை உலகளவில் வளர்க்கவும், பெரிய டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாற்றவும் இந்த முதலீட்டை டாடா குழுமம் ஈர்க்க இருக்கிறது. தற்போது டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு வரும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் விரைவில் முதலீடுகளை பெற ஐபிஓ மூலம் நிதி திரட்ட டாடா மோட்டார்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மதிப்பு 837 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மார்ச் மாதம் 2022ம் ஆண்டு வரை மட்டும் ஓராண்டு லாபமாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் 3 ஆயிரத்து 529 கோடி ரூபாய் ஈட்டி நிறுவனத்தை திக்குமுக்காட வைத்துள்ளது. தாய் நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் தனது பூஜ்ஜிய கடன் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் அடுத்த கட்டமாக தானியங்கி நுட்பம்,விமானம்-விண்வெளித்துறை, தொழிற்சாலை உபகரணங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகிய 4 முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி நகர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை உட்பட 18 இடங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.