அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு அமெரிக்க டாலர் பணம் தந்தால் அதற்கு ஈடாக பாகிஸ்தான் நாட்டு பணம் 225 ரூபாய் தர வேண்டும். கடந்த புதன்கிழமை ஒரே நாளில் பாகிஸ்தான் நாட்டு பணமான ரூபாய் 24 ரூபாய் 54 காசுகள் குறைந்தது. பாகிஸ்தானில் வெளிநாட்டு பணம் மாற்றும் திட்டம் கடந்த 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இப்போது வரை ஒரே நாளில் இத்தனை பெரிய வீழ்ச்சியை பாகிஸ்தான் சந்தித்ததே கிடையாது. பாகிஸ்தானில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக சர்வதேச நாணய நிதியத்துக்கு தர வேண்டிய நெடுங்கால தொகை திருப்பி தரப்படவில்லை. இந்த சூழலில் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை பாகிஸ்தான் கேட்ட நிலையில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பொருளாதாரத்தை சீரமைக்க இஷாக் தர் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாமலேயே சீரமைக்க அவர் நினைத்தது பாதகமாக மாறிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிக்கும், ஷெபாஷ் ஷெரிப் ஆட்சிக்கும் இடையே நடக்கும் மோதல் போக்கால் அரசு நிலையற்ற சூழலில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். எனவேதான் சர்வதேச நாணய நிதிய நிதி கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது..