கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான் பரபரப்பில் வீழத் துவங்கியது.
“பல்வேறு நாடுகளில் பொது முடக்கங்கள் செயல்படுத்தப்பட்டு, தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் தடைபட்டால் மேற்கண்ட பங்குகள் மிக மோசமாக பாதிக்கப்படும்,” என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.
சாலட் ஹோட்டல்கள், இந்திய ஹோட்டல்கள், லெமன் ட்ரீ, ஸ்பெஷாலிட்டி உணவகங்கள், மஹிந்திரா ஹாலிடேஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை 7% முதல் 15% வரை சரிந்தன, அதே நேரத்தில் பிவிஆர் மற்றும் ஐனோக்ஸ் லீசர் முறையே 11% மற்றும் 9% வீழ்ச்சியடைந்தன. இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் முறையே 9% மற்றும் 7% சரிந்தன.
கடந்த சில மாதங்களில், கடுமையான வீழ்ச்சிக்குப் பிறகு பயணம், சுற்றுலா துறை பங்குகள் மற்றும் பொழுதுபோக்கு துறைப் பங்குகள் படிப்படியாக கோவிட்-க்கு முந்தைய மட்டங்களுக்கு மீண்டு வரும் என்ற எதிர்பார்ப்புகளின் நடுவில், நோய்த்தொற்று விகிதம் குறைந்து, மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் விகிதமும் அதிகரிக்கத் துவங்க இந்த பங்குகளில் பல மிக வேகமாக மீண்டன. ஒமிக்ரான் வைரஸின் புதிய கவலைகள் இப்போது மீண்டும் முதலீட்டாளர்களின் மனதில் ஆழமான கவலையை உருவாக்கி இருக்கிறது. முதலீட்டாளர்கள் இப்போதைக்கு சுற்றுலா, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த பங்குகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், மருந்து, தகவல் தொழில்நுட்ப, வங்கி மற்றும் நுகர்வோர் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
முதலீட்டாளர் கவனம் இப்போது மருத்துவத் துறை நோக்கி நகர்கிறது, நிஃப்டி மருத்துவத்துறை குறியீடு 1.7% அளவுக்கு அதிகரித்தது, சிப்லா, டாக்டர் ரெட்டீஸ், அல்கெம், ஃபைசர் மற்றும் டாக்டர் லால் பாத்லாப்ஸ் போன்றவை 3% முதல் 7% வரை அதிகரித்தது. இந்த பங்குகளில் பல சமீபத்திய மாதங்களில் நோய்த்தொற்று குறைந்த போது சாதகமாக இல்லை. ஆக்ஸிஜன் சப்ளையர் லிண்டே இந்தியா 3% க்கும் அதிகமாக உயர்ந்தது.