2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
குடைகள் மீதான வரி உயர்வு:
2022-23-ம் நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் குடைகளை இறக்குமதி செய்வதற்கான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஒருசில குடைகளுக்கான வரியும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத எஃக்கு மீதான வரிக்குறைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஸ்டீல் ஸ்கிராப்களுக்கு விதிக்கப்படும் வரி மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சோடியம் சயனைடு மீதான வரியும் உயர்த்ப்பட்டுள்ளது.
வைரத்தின் மீதான வரி குறைப்பு:
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமான ரசாயனங்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கக்களுக்கான மாற்றுவரி 15% குறைக்கப்பட்டுள்ளது. இறால் மீன் வளர்ப்பு மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் எதிர்ப்பார்ப்பும், ஏமாற்றமும்….
2022-23-ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில், தனிநபர் வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பு தொடர்பான எந்த அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. இதனால், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு எந்தவித மாற்றமுமின்றி 2.50 லட்சமாக உள்ளது.
அவகாசம்… திருத்தம் தொடர்பான அறிவிப்புகள்….
வருமான வரி தாக்கல் செய்வோர் அதில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம். திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புபவர்களுக்கும் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மாலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 12.30 மணிக்கு நிறைவு செய்தார். 2022-23-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும், பயனுள்ள நிதிநிலை அறிக்கை என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய நிதிநிலை அறிக்கை பங்குச் சந்தையில் எந்தவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.