அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை வரும் வாரத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் இன்று அதீத சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1093 புள்ளிகள் சரிந்து 58,840 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு நிப்டி 346 புள்ளிகள் குறைந்து 17, 530 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கி உள்ளனர். இது எதிர்வரும் நாட்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் பொழுது பங்குச்சந்தைகள் இன்னும் அதீத சரிவை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அது முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளை தேர்வு செய்து வாங்குவதற்கு நல்ல நேரமாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்குச்சந்தை ஒருபுறம் சரிவில் இருந்தாலும் தங்கத்தின் விலையும் சரிவுடன் நிறைவடைந்து இருக்கிறது. இதன்படி இன்று 24 கேரட் முதலீட்டுக்கான தங்கத்தின் விலை ஒரு கிராம் 4974 ரூபாய் என்ற நிலையிலும் ஒரு சவரன் 39 ஆயிரத்து 792 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 4, 626 ரூபாய் என்ற நிலையிலும் ஒரு சவரன் 37 ஆயிரத்து 8 ரூபாய் என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையும் இனிவரும் நாட்களில் சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர். தங்கத்தின் விலை ஒருபுறம் சரிந்து இருந்தாலும் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து இருக்கிறது. அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 61 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையிலும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 61,600 என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.