இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான ₹2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பானது 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அறிவித்தது. இதற்காக ரேஷன் கார்டை குடும்ப தலைவியின் பெயருக்கு மாற்ற வேண்டியது இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே ₹1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. போகப் போகத் தான் தெரியும் யாருக்கெல்லாம் இந்தத் தொகை கிடைக்கும் என்று.
மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு ₹762 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. மகளிர் மருத்துவ காப்பீட்டிற்கு ₹1,046 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்படுள்ளது. முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு ₹959 கோடி ஒதுக்கப்படுள்ளது. மகளிர், பேருந்தில் இலவசமாகப் பயணிக்க ₹750 கோடி டீசல் மானியம் வழங்கப்படவுள்ளது.
பட்ஜெட்டில், பெரும்பாலான கடன்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.